வேலூர் அருகே சக்திவேலுக்கு தர்ம அடி.. இரண்டாவது முறையாக வந்த போது ஒன்று கூடிய ஊர் மக்கள்
வேலூர்: வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த லட்சுமிபுரம் மலை மீது தீர்த்த பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்து வந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் சிசிடிவி கேமராவை அந்த பகுதியில் பொருத்தினார்கள்..இது தெரியாமல் வழக்கம் போல் வந்த வாலிபர் செய்த சேட்டையால், வசமாக சிக்கினார்.. பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து மறக்க முடியாத அளவிற்கு பரிசு கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருடர்களை கண்காணிக்க இன்றைய சூழலில் சிசிடிவி வைத்தால் தான் முடியும். தொழில்நுட்பங்கள் வளர வளர திருட்டை தடுக்க அதனை பயன்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா இல்லா வீடுகளோ, கடைகளோ அல்லது தெருக்களோ இருந்தால், யார் திருடினார்கள் என்பதை கண்டுபிடிக்கவே முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக திருடர்கள் எளிதாக திருடி செல்கிறார்கள்..அப்படி அடிக்கடி திருட்டில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிசிடிவி கேமராவை வைத்து பிடித்துள்ளனர். வேலூர் அருகே என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த லட்சுமிபுரம் மலை மீது தீர்த்த பொன்னியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி திருட்டு உள்பட பல்வேறு குற்ற செயல்கள் நடைபெற்று வந்துள்ளதாம். இதையடுத்து லட்சுமிபுரம் ஊர் பொதுமக்கள் சார்பாக கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கண்காணிப்பு கேமராவை அடிக்கடி பார்த்து அவர்கள் கண்காணித்து வந்தனர்.
அப்படித்தான் கண்காணித்துக் கொண்டிருக்கையில். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் உண்டியல் முன்பு ஒருமுறை பணத்தை திருடிச்சென்ற அதே இளைஞர். நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே கோவிலுக்கு வந்து உண்டியல் பணத்தை திருடிக்கொண்டிருந்தாராம். பின்னர் அங்கிருந்த மின் மோட்டாரை திருடியிருக்கிறார்.
இதனை கண்காணிப்பு கேமரா மூலம் தங்கள் செல்போனில் பார்த்த ஊர் பொது மக்கள் அந்த இளைஞரை பிடிக்க மலை மீதுள்ள கோவிலுக்கு விரைந்து சென்றுள்ளனர். அவர்களை பார்த்ததும் அந்த நபர் கோவிலில் இருந்து வெளியே ஓடியபோது பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார்கள்..
பின்னர் இதுகுறித்து திருவலம் போலீசாருக்கு ஊர் பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் பிடிபட்ட இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் வேலூர் சாய்நாதபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 24) என்பதும், தற்போது காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications