வேலூரில் 1 ஆடு ₹30,000.. கிருஷ்ணகிரியில் அதுக்கு மேல.. மாட்டு பொங்கலுக்கு கால்நடை சந்தைகள் ஒரே பிஸி
வேலூர்: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு கால்நடை சந்தைகளில் வியாபாரம் படுஜோராக நடந்துள்ளது.. கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட சந்தைகளில், கால்நடைகளை அலங்கரிக்கும் அலங்கார பொருட்களும் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டது, கால்நடை வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
பொங்கல் பண்டிகை தினத்தில் பொதுவாக யாரும் அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். மறுநாள் மாட்டு பொங்கல் நாளில் தான் அசைவ உணவு எடுத்து கொள்வது வழக்கம். ஆனால், நாளை திருவள்ளுவர் தினம் என்பதால், இறைச்சி கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

எனினும் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த ஒரு வார காலமாகவே கால்நடை சந்தைகள் பிஸியாக காணப்பட்டன.. பொங்கல் பண்டிகையையொட்டி, ஊத்தங்கரையில் நடந்த மாட்டு சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் அதிகம் பங்கேற்று மாடுகளை வாங்கியதால், ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக கூறியிருக்கிறார்கள். மாட்டு சந்தையில், மாடுகளை விற்கவும், வாங்கவும், கேரளா மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.
மாட்டுச்சந்தைகள்: இதுகுறித்து விவசாயிகள், வியாபாரிகள் சொல்லும்போது, மாட்டுச் சந்தையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையானது. குறிப்பாக கேரளா மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். பசுமாடுகளின் விலை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் வரை இருந்தது. இதனால் சுமார் ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது என்றனர்.
அதேபோல, மாட்டுப் பொங்கலுக்கு, மாடுகளை அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கமாகும். அந்தவகையில், கால்நடைகளை அலங்கரிக்க கண்களை கவரும் வகையில் பல வண்ணங்களில் நூல் கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு, குஞ்சங்கள், மூக்கணாங்கயிறு, கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்கைகள், குப்பி, பட்டை சங்கிலி, ஜங்கு பட்டை, வண்ணப்பூச்சுகள், கள்ள பூட்டு, வாயப்பட்டி, சாட்டை ஆகிய அலங்கார பொருட்களும், கால்நடை சந்தைகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன..
வியாபாரம்: கால்நடை சந்தைக்கு பெயர்போன வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்திலும், பொங்கல் பண்டிகையையொட்டி ஆட்டுச்சந்தையில் வியாபாரம் களைகட்டியது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடப்பது இங்கு வழக்கமாகும்..
எப்போதுமே வெயில், குளிர் எதுவானாலும், வேலூர் மாவட்டமே முதன்மையாக திகழும். அந்தவகையில் தற்போது கடுமையான பனிப்பொழிவு இருந்தபோதிலும், பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் லோடு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. இதில் ஏராளமான வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகளை வியாபாரம் செய்தார்கள்.
வெள்ளாடுகள்: ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. வெள்ளாடுகள், முத்து கிடாய் ரகங்கள், நாட்டு ரக கிடாய்கள், செம்மறி ஆடுகள் என பல்வேறு ரக ஆடுகள் அதிகம் கொண்டுவரப்பட்டிருந்தன. பொங்கல் பண்டிகையையொட்டி, ஒரு ஆடு ரூபாய் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதாவது வழக்கத்தை விட டபுள் மடங்கு விலையில் ஆடுகள் விற்கப்பட்டன.. இதனால் கால்நடை வியாபாரிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications