வேலூரில் பழைய தங்க நகைகளை உருக்கி.. புதிய தங்கத்துக்கு ஆசைப்பட்ட நர்ஸ்.. நம்பவே முடியாத சம்பவம்
வேலூர்: தங்கம் விற்கும் நிலையில், தங்க நகைகளை விலைக்கு வாங்குவதை நடுத்தர, ஏழை மக்களால் நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.. இதில் தங்க நகைகள் கொள்ளை, திருட்டு சம்பவங்கள் என குற்ற சம்பவங்களும் பெருகிவிட்டன.. போதாக்குறைக்கு நகைப்பட்டறைக்குள்ளேயே சென்று அபகரிக்கும் போக்கும் தலைதூக்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பழைய நகைகளை உருக்கி பயன்படுத்துவதில் நாட்டம் அதிகரித்து, அதிலும் சிலர் ஏமாந்து நிற்கிறார்கள். அப்படித்தான் வேலூரிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. யாரிந்த நிர்மல் குமாரி?
பழைய நகையை உருக்கி புதியது செய்து தருவதாகவும், பழைய நகைக்கு மாற்றாக புதிய நகை தருவதாகவும் சிலர் கூறி, தற்போது மோசடிகள் அதிகரித்து வருகின்றன.நகை எடை குறைக்கப்பட்டு காட்டுதல், தூய்மை அளவை தவறாக சொல்லுதல், உண்மையான தங்கத்தை வேறு உலோகத்துடன் மாற்றுதல் என்று பலவிதமான தகிடுதத்தம் காரியங்கள் மலிந்து வருகின்றன..

தங்க நகைக்காரர்கள்
மோசடி செய்பவர்கள் நகையை உருக்கும்போது அல்லது எடை போடும்போது தங்கம் அளவைக் குறைப்பது அல்லது தரம் குறைந்த நகைகளை வழங்குவது போன்ற தில்லுமுல்லு வேலைகளை செய்ய நிறையவே வாய்ப்புள்ளது.எப்போதும் நம்பகமான நகைக்கடைகளில் மட்டுமே பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
ஒருவேளை நீங்கள் கொடுக்கும் பழைய தங்க நகைகளை உருக்கினால், அதனை நீங்களே நேரில் கண்காணிப்பது நல்லது... ரசீது, ஹால் மார்க் சான்றிதழ் இப்படியான விஷயங்களையும் பதிவு செய்து வைத்திருப்பதும் நல்லது, அப்போதுதான் மோசடிகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும் என்று போலீசார் அவ்வப்போது அலர்ட் செய்தபடியே உள்ளனர்..
எனினும்கூட, ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்? வேலூர் மாவட்டத்தில், குடியாத்தத்தை சேர்ந்த நிர்மல்குமாரி என்ற பெண் இப்போது நகை மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பழைய நகைகள்
நர்சிங் படித்துள்ள நிர்மல்குமாரி, சில வருடங்களுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் பழைய நகையை மாற்றி புதிய நகை வாங்கிய அனுபவம் இருந்ததால், அதே கடைக்காரரிடம் மறுபடியும் நம்பிக்கை வைத்து சென்றிருக்கிறார்..2024ம் ஆண்டு, தன்னிடம் இருந்த 16 சவரன் பழைய நகைகளை அந்த கடைக்காரரிடம் கொடுத்து, அவற்றை உருக்கி புதிய நகைகளாக செய்து தரும்படி கேட்டுள்ளார்.. இதற்காக கூடுதலாக ரூ.1 லட்சம் பணமும் வழங்கினாராம்..
ஆனால், நகைக்கடைக்காரர் இதுவரை எந்த நகையையும் செய்து தரவில்லையாம்.. பழைய நகைகளையும் திருப்பி தராமல், ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி, நாட்களை கடத்தி வந்தாராம்.. அதற்கு பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து, போலீசுக்கு சென்றுள்ளார் நிர்மல்குமாரி..
புதிய நகைக்கு ஆசை
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இதுகுறித்து மனு அளித்தார்.. ஆனால், தன்னுடைய புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தன்னுடைய நகை மற்றும் பணத்தை மீட்டுக் கொடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர் மீண்டும் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மனுவை பெற்ற போலீசார், சம்பவத்தைப் பற்றிய விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பழைய நகைகளை உருக்கி புதிய நகைக்கு ஆசைப்பட்ட நிர்மல்குமாரி இன்று அனைத்து நகைகளையும் இழந்து நிற்கிறார்.. ஒன்றுக்கு இரண்டாக புகார்களை தந்துள்ள நிலையில், இதுகுறித்த விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications