வேலூரில் முன்கூட்டியே மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியாச்சு! மழையால் 3 மணிக்குள் கலெக்டர் எடுத்த அதிரடி
வேலூர்: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. அந்தவகையில், இன்று இரவு 7 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை., செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வேலூரிலும் கனமழை கொட்டி வருவதால், பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்றைய தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 11.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது..

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழக - புதுவை - தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும் என தெரிகிறது. அதுபோலவே நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இது, வடக்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் நகர்ந்து செல்லக்கூடும். மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே இன்றைய தினம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
நாளையும் மழை
நாளை 23ம் தேதி இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தமிழகத்தில் பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
நாளை மறுநாள் 24ம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும், 25ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
26ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும், 27, 28ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் இன்று அதாவது புதன்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.. அதேபோல சேலம், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதேபோல் செங்கல்பட்டு, திருச்சி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. சில பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் வெளுத்து கட்டிய மழை
இதில் வேலூர் மழையும் மிரட்டி கொண்டிருக்கிறது. நேற்று செவ்வாய்க்கிழமை கனமழை பெய்ததில், வேலூர் மாநகராட்சி 4வது மண்டலத்திற்குட்பட்ட பெரிய அல்லாபுரம், எழில் நகர், கண்ணதாசன் தெரு போன்ற பகுதிகளில் மழைநீர் கழிவு நீரோடு கலந்து தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது.. பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளானார்கள்.. வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சிறிது நேரம் இடைவெளி விட்ட நிலையில், நேற்று மாலை வேலூரில் மீண்டும் மழை கொட்ட துவங்கிவிட்டது.. நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை கொட்டியது..இதனால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.. தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்க ஆரம்பித்துவிட்டது.
முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பினர்
பெரியல்லாபுரம், எழில்நகர், கண்ணதாசன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து ஓடுவதால், அப்பகுதி மக்கள் பெருத்த சிரமத்துக்கு ஆளாகிவிட்டனர்..
இந்நிலையில், இன்று முழுவதுமே மழை நீடிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்ப மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.. அதன்படி, இன்று மாலை 3 மணி வரை மட்டுமே வேலூரில் பள்ளிகள் செயல்பட்டன. 3 மணிக்கு பிறகு பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications