"என்னை கேட்க நீ யாரு!" அட்வைஸ் செய்த ஆசிரியரை அதட்டிய மாணவர்! கூடவே எகிறிய மாணவரின் தந்தை! ஷாக்
சிறுவன் வண்டி ஓட்டி விபத்து நடந்தால் நான் பார்த்துகிறேன் என்று தந்தை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: குடியாத்தம் அடுத்துள்ள நடுப்பேட்டை பள்ளியில் தாறுமாறாக பைக் ஓட்டியது குறித்து மாணவர் மற்றும் அவரது தந்தையிடம் ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். அதற்கு ஆசிரியர்களிடம் அவர்கள் பேசிய பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சமீப காலங்களாகவே பள்ளி மாணவர்கள் தங்களுக்குப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களை மதிக்காமல் இருக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களிடம் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்கிறார்கள்.
மாணவர்கள் ஆசிரியர்களை அதட்டுவது போன்ற வீடியோக்களும் கூட இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தன. அப்படியொரு சம்பவம் தான் இப்போது வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்துள்ளது.

வேலுார் குடியாத்தம்
வேலுார் குடியாத்தம் அருகே நடுப்பேட்டையில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. மொத்தம் 600 மாணவர்கள் படிக்கும் இந்த + 2 படித்து வந்த மாணவர் ஒருவர், பள்ளிக்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது, வெளியே இருந்த ஆசிரியர் ராஜாராம் என்பவரை இடிப்பது போல வண்டியை ஒட்டியுள்ளார். இதன் காரணமாக நேற்று முன்தினம் மாணவரையும், அவரது தந்தையையும் பள்ளிக்கு அழைத்து இது குறித்துக் கேட்டுள்ளனர். அப்போது மாணவரின் அப்பா கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல், தவறு செய்த தனது மகனிடம் எதையும் கேட்கவில்லை..

வீடியோ
அந்த தந்தை ஆசிரியரிடம் பேசிய பேச்சு குறித்த வீடியோ தான் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. இணையத்தில் வேகமாக இப்போது பரவும் அந்த வீடியோவில் அந்த ஆசிரியர், "ஏன் இடிப்பது போல வந்தாய்" என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவர், "நான் இடிக்கும் மாதிரி வந்தேன் என்றால்.. எங்குப் பார்க்க வேண்டுமோ.. அங்குப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்கிறார். அப்போது இடையில் அவரது அப்பா, "வண்டியை அவன் தான் ஓட்டினானா" என்று கேட்கிறார். அதற்கு ஆம் அவர் தான் என்று ஆசிரியர் கூறுகிறார்..

சைலன்ஸ்
இப்படி வண்டி ஓட்டும் போது.. எதாவது நடந்தால் என்ன செய்வாய் என்று அக்கறையுடன் அந்த ஆசிரியர் கேட்கிறார். மாணவருக்கு அறிவுரை வழங்க வேண்டிய தந்தையோ.. "11 மணிக்கு நீங்க அங்க என்ன செஞ்சுட்டு இருந்தீங்க" என்று ஆசிரியரைப் பார்த்துக் கேட்கிறார். அதற்கும் கூட அந்த ஆசிரியர் பொறுமையாகத் தான் லீவ் எடுத்து சென்றதாகக் கூறுகிறார். அப்போது அருகே இருந்த மற்றொரு ஆசிரியர், "பைக் ஓட்ட லைசன்ஸ் இருக்கா.. லைசன்ஸ் இல்லாமல் ஏன் ஓட்டுகிறார்" என்று கேட்கிறார்.

உணராத தந்தை
தனது மகன் செய்தது தவறு என்பதைக் கூட உணராத அந்த தந்தை ஆசிரியர்களைப் பார்த்து, "உங்களிடம் லைசென்ஸ் இருக்கா.. ஹெல்மேட் இருக்கா.." என்று பதிலுக்குக் கேட்கிறார். எங்க கிட்ட எல்லாம் இருக்கு என்று கூறிய ஆசிரியர், "உன் கிட்ட லைசென்ஸ் இருக்கா" என்று மாணவரைப் பார்த்து கேட், "அதெல்லாம் நீங்க ஏன் கேட்கறீங்க.. பாடம் மட்டும் நடத்துங்கள்.. அது தான் உங்க வேலை.. எங்ககிட்ட லைசன்ஸ் எல்லாம் கேட்கக்கூடாது" என்கிறார். மீண்டும் அந்த மாணவரின் அப்பா, "உங்க லைசென்ஸை காட்டுங்க" என்று ஆசிரியரிடமே கேட்கிறார். ஆசிரியரும் பொறுமையாகத் தனது லைசென்ஸை காட்டுகிறார்.

மிரட்டல்
பையனுக்குப் புத்தி சொல்லுவீங்க என பார்த்தா நீங்களும் இப்படி பேசறீங்களே என்று ஆசிரியர் சொல்ல.. அதற்கு அவரது தந்தை, "அவன் ஓட்டி எதாவது விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று எனக்குத் தெரியும்" என்று அதட்டலாகப் பதிலளிக்கிறார். மேலும், "சீரூடை இல்லாமல் மாணவர் பள்ளிக்கு வருகிறார்.. இனிமேல் சீருடை அணிந்த வந்தால் தான் பள்ளியில் அனுமதிப்போம்" என்கிறார்.. அதற்கு அந்த மாணவர், "என்னை உட்கார வைக்கலனா ஸ்கூல் எப்படி நடக்கும்னு நான் பார்க்கிறேன்.. பரிச்சையும் வேணாம் ஒன்னும் வேணாம்னு" என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.

நெட்டிசன்கள் தாக்கு
இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும், 18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்.. பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெளிவாக எச்சரித்துள்ளனர். இருந்த போதும், விபத்து நடந்தால் நான் பார்த்துகிறேன் என்று தந்தை கூறியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது மகன் செய்தது தவறு என்று உணர்ந்து அவருக்கு அட்வைஸ் செய்யாமல் ஆசிரியரிடம் லைசென்ஸ் இருக்கா.. ஹெல்மெட் இருக்கா என்று கேட்ட மாணவரின் தந்தையின் செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications