வேலூர் அருகே காணாமல் போன கிணறு.. ஒரே நிமிடத்தில்.. மலைக்கிராம மக்கள் கண் முன்னே நடந்த சம்பவம்
வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே பீஞ்சமந்தை ஊராட்சி நார்ச்சிமேடு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அங்கு கிணறு ஒன்று இருந்து வந்தது. அந்த கிணறை தான் 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடிநீர் எடுக்க பயன்படுத்தி வந்தார்கள்.ஆனால் நேற்று மலைக்கிராம மக்கள் கண் முன்னே குடிநீர் கிணறு இருந்த இடமே தெரியாமல் முழுவதுமாக மண்ணில் மறைந்தது.. இதை கண்டு அந்த மக்கள் ஆடிப்போனார்கள்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஒடுகத்தூரைச் சுற்றியுள்ள ஜவ்வாது மலைப்பகுதிகளில் பல பழங்குடி இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் வசிக்கிறார்கள். குறிப்பாக சொல்வது என்றால், ஒடுகத்தூரை அடுத்த மலைப்பகுதியில் உள்ள பீஞ்சமந்தை ஊராட்சியின் கீழ் தான் அந்த மலை கிராமங்கள் உள்ளன.

பீஞ்சமந்தை ஊராட்சியின் கீழ் தொங்குமலை, பீஞ்சமந்தை, சின்ன எட்டிபட்டு, கட்டியப்பட்டு, தேந்தூர் , பெரிய பணப்பாறை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை,எல்லுப்பாறை, நார்ச்சிமேடு என பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பல கிராமங்கள் பல நூற்றாண்டுகளாகக் குடியிருக்கும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய குடியிருப்புகளாக இருக்கிறது.
இந்த மலைக் கிராமங்களுக்குத் தரமான சாலை வசதி, மருத்துவ வசதி மற்றும் பொதுப் போக்குவரத்து வசதி இல்லை.இது தொடர்பாக மலை கிராம மக்கள் பலவருடங்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். சாலை வசதி ஒருபுறம் எனில் குடிநீருக்கும் தற்போது ஒரு சில இடங்களில் சிக்கல் அதிகரித்துள்ளது. நேற்று நார்ச்சிமேடு கிராமத்தில் குடிநீர் கிணறு மண்ணோடு மண்ணாக மறைந்து போயிருக்கிறது.
பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உள்பட்ட நார்ச்சிமேடு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அங்கு கிணறு ஒன்று இருந்தது. அந்தக் கிணற்றில் மலைக் கிராம மக்கள் அனைவரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார்கள். ஆனால், அந்தக் கிணறும், கிணற்றைச்சுற்றி உள்ள தடுப்புச்சுவரும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. அந்தத் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள் முன்பு வரை பழுதடைந்து இருந்த குடிநீர் கிணற்றில் இருந்து மலைக்கிராம மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார்கள். நேற்று அந்தக் குடிநீர் கிணற்றில் மலைக் கிராம மக்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மலைக் கிராம மக்கள் கண் எதிரே கிணறு திடீரென மண்ணில் புதைந்தது. தற்போது கிணறு இருந்த இடமே தெரியாமல் மாறிவிட்டது. அந்த நிகழ்வை நேரில் பார்த்த மலைக் கிராம மக்கள் ஆடிப்போனார்கள்.
கிணறு மண்ணுக்குள் புதைந்ததால் குடிநீர் எடுத்து வர சுமார் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வனப்பகுதிக்குள் சென்று அங்குள்ள கானாறுகளில் செல்லும் தண்ணீரை எடுத்து வரும் நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட கிணற்றில் இயற்கையாகவே ஊற்று நீர் சுரக்கும். இந்தத் தண்ணீரை குடிப்பதற்கும் நன்றாகவே இருக்கும். ஆனால், இப்போது குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications