தள்ளுவண்டியில் இறந்த 5 வயது சிறுவன்.. தண்ணீர், உணவின்றி இறந்ததாக பிரேத பரிசோதனையில் பகீர்
விழுப்புரம்: விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில் 5 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
Recommended Video
அந்த சிறுவன் பட்டினியால் இறந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதுவரை அந்த குழந்தைக்கு யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை என்பதால் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல் தெரு என்ற இடத்தில் சிவகுரு என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரமாக தள்ளுவண்டியில் சலவைத் தொழில் செய்து வருகிறார்.

துணி சலவை
விழுப்புரத்தில், கடந்த 15-ஆம் தேதி விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த துணி சலவை செய்யும் வாகனத்தில், 5 வயது சிறுவன் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அங்கிருந்தவர்கள் எழுப்பினர். ஆனால் சிறுவன் அசைவில்லாமல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

5 வயது சிறுவன்
இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது அந்த 5 வயது சிறுவன் இறந்து கிடந்தது தெரியவந்தது. உயிரிழந்த சிறுவனின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சிறுவனின் மர்ம மரணம் குறித்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

எந்த தடயம்
இந்த நிலையில், சிறுவனின் உடலில் கொலை செய்யப்பட்டதற்கான எந்த தடயங்களும் இல்லை என்பதால், சிறுவன் தானாக இறந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவனின் உணவுக் குழாயில் உணவுப் பொருட்கள் எதுவும் இல்லாததால், சிறுவன் பசியால் இறந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

4 தனிப்படை
இதையடுத்து, சிறுவனுக்கு உணவு தராமல் யாரேனும் துன்புறுத்தினரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவனின் பெற்றோர்கள் யார் என்பது குறித்தும், 4 தனிப்படை அமைத்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அந்த குழந்தைக்கு யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை என்பதால் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications