திண்டிவனம் திமுக பெண் கவுன்சிலரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பட்டியலின நகராட்சி ஊழியர்?
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக ரோசணை பகுதியை சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். நகராட்சி ஊழியர் முனியப்பன், திண்டிவனம் 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா என்பவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக ரோசணை பகுதியை சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி, திண்டிவனம் 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா, அலுவலக பணியில் ஈடுபட்டிருந்த முனியப்பனிடம் சென்று தன் வார்டில் நடைபெற்ற பணிக்கான நிதி ஒதுக்குதல் தொடர்பாக கோப்பினை எடுத்து வர கேட்டாராம்.

அதற்கு முனியப்பன் சரியான முறையில் பதில் அளிக்காமல் இருந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர் ரம்யா ராஜா முனியப்பனை ஒருமையில் திட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடம் பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்த முனியப்பன் என்பவர் தன்னை தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் நான் கேட்டதற்கு பதில் கூறாமல் இருந்ததால், நான் கேட்காமல் யார் கேட்பது என்றும், அந்த பணியை செய்யாமல் இருந்த நகராட்சி ஊழியர் மீது ரம்யா ராஜா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகர மன்ற தலைவரின் கணவரிடம் கூறினாராம்.
அதன் பின் நகராட்சி ஆணையர் அறைக்கு தன் துணை ஆட்களுடன் சென்ற நகர மன்ற தலைவரின் கணவர் கவுன்சிலர் ரவிச்சந்திரன் முனியப்பனை அழைத்து ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு என்ற வார்த்தையை கேட்டு போ என கூறியதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. ஆனால் நடந்தது என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.. இந்த நிலையில், திண்டிவனம் நகராட்சி ஆணையர் அறையில் நின்றிருந்த முனியப்பன் திடீரென மன்னித்து விடுங்கள் என அழுதபடி கூறினாராம். அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த ரம்யா ராஜா செய்வதறியாது திகைத்து போனாராம். இப்படியாக கவுன்சிலரன் காலில் விழுந்து நகராட்சி ஊழியர் மன்னிப்பு கேட்டு விட்டு செல்வது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.
இச்சம்பவத்தை அறிந்த திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த கவுன்சிலர்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நகராட்சி ஊழியர் முனியப்பனை காலில் விழ வைத்ததாக 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா மீதும், காலில் விழ வற்புறுத்தியதாக நகரமன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
நகராட்சி ஆணையர் இல்லாத நேரத்தில் அவருடைய அறையை சட்ட விரோதமாக பயன்படுத்தியுள்ளதாகவும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகராட்சி மேலாளர் நெடுமாறனிடம் புகார் அளித்துள்ளார்கள். மேலும் திண்டிவனம் டிஎஸ்பியிடமும் புகார் மனு அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. . இது தொடர்பாக நகர மன்ற துணைத் தலைவர் மற்றும் ஆதரவாளர்கள் நகராட்சியில் நடந்த சம்பவத்திற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகர மன்ற தலைவர் அவர்களுடைய கணவர் ரவிச்சந்திரன் மீதும் கவுன்சிலர் ரம்யா ராஜா மீதும் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications