முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை மிரட்டிய திமுக பிரமுகர்.. பரவிய வீடியோ.. அதிமுகவினர் பரபர புகார்!
விழுப்புரம் : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட திமுக பிரமுகர் மீது அதிமுகவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம் குறித்து விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சி.வி சண்முகம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி பேசியதற்கு பதிலடியாக கொலை மிரட்டல் விடுப்பது போன்று பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் சக்திவேல்.

சி.வி.சண்முகம்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகம் பல்வேறு மேடைகளில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றியும் கடுமையாக சாடி பேசி வருகிறார். சமீபத்தில் கூட அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பற்றி அவர் ஒருமையில் பேசியதும், காவல்துறையினரை விமர்சித்ததும் சர்ச்சைக்குள்ளானது.

வீடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி
இந்நிலையில், சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி சக்திவேல் என்பவர், முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கடுமையாக விமர்சித்துப் பேசியதோடு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிமுகவினர் போலீசில் புகார்
இதையடுத்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட தி.மு.க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சங்கராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அரசு ஆகியோர் தலைமையிலான அ.தி.மு.க நிர்வாகிகள் வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையிலும் புகார்
அதேபோல, இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வடசென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பாலமுருகன், காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திலும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் திமுக நிர்வாகி சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பற்றி சக்திவேல் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications