அமித் ஷா மகனுக்கு ஒரு சட்டம்.. அமைச்சர் பொன்முடி மகனுக்கு ஒரு சட்டமா.. கொந்தளிக்கும் சிவி சண்முகம்!
விழுப்புரம்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிமுக எம்பி சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.
அதிமுக 51வது தொடக்க விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் அதிமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சிவி சண்முகம் கூறுகையில், கோவை குண்டுவெடிப்பைப் பற்றி முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று வரை வாய் திறக்கவே இல்லை. முதலமைச்சரின் மௌனம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது என்று தெரிவித்தார்.
எல்லாம் மய்யத்தை மறக்கத்தான்.. இன்னும் 5 வருஷம் பிசி! அரசியலை கொஞ்சம் கவனிங்க ஆண்டவரே! ஏங்கும் மநீம!

பொம்மை முதல்வர்
தொடர்ந்து ஆவின் ஆரஞ்சு பால் விலை உயர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழகத்தில் பால் விலை ஒரே நாளில் ரூ.12 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 40 சதவிகித அளவிற்குப் பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தானும், தன் குடும்பமும் வாழ வேண்டும் என பொம்மை முதல்வர் போல் முதலமைச்சர் முக ஸ்டாலின் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்ருக்கிறார் என்று கடுமையாக விமர்சித்தார்.

ஆளுநருக்கு திமுக மிரட்டல்
தொடர்ந்து ஆளுநர் விவகாரம் பற்றிய நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக அரசு செயல்படாமல் இருப்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினால், உடனடியாக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று அவருக்கு மிரட்டல் விடுக்கும் வேலைகளைச் செய்கிறார்கள். இதன் மூலம் திமுக அரசு தன்னுடைய கையாலாகாத தனத்தை வெளிப்படையாகக் காட்டி வருகிறது என்று தெரிவித்தார்.

பொன்முடி மகன் பற்றி கருத்து
தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பதவியைக் கொடுத்த போது அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது பொன்முடி மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் பதவி கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு எப்படி பதவி கொடுத்தார்கள் எனக் கேள்வி எழுப்பினால், அதற்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

யார் அசோக சிகாமணி?
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளராகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத்தலைவராகவும் அசோக் சிகாமணி பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐசிசி தலைவராக இருந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் அதிகாரமும் பலமும் மிக்க இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசன் அணியை சேர்ந்தவர் அசோக் சிகாமணி என்பது குறிப்பிடத்தக்கது.