Karuppu Day 5 Box Office: 5 நாளில் பாக்ஸ் ஆபிஸை புரட்டிய ‘கருப்பு’.. எத்தனை கோடி வசூல் தெரியுமா? சூர்யாவின் கம்பேக்
சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பல ஆண்டுகளாக ஒரு பெரிய கமர்ஷியல் வெற்றிக்காக காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு இந்த படம் சரியான கொண்டாட்டமாக மாறியுள்ளது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு, தற்போது வசூல் எண்ணிக்கைகளிலும் தெளிவாக தெரிந்து வருகிறது.
'மூக்குத்தி அம்மன்' படத்தின் மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்த ஆர்.ஜே. பாலாஜி, அதற்கு முன்பு 'எல்கேஜி' படத்துக்காக கதை எழுதி வெற்றி கண்டவர். ஒரு பெரிய மாஸ் ஹீரோவை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் இந்தக் கதையை முதலில் நடிகர் விஜய்யிடம் சொல்லியதாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை.

கமிட்டான சூர்யா
அதன் பிறகுதான் இந்தக் கதை சூர்யாவிடம் சென்றது. சூர்யா கதையை கேட்டவுடன் ஓகே சொன்னதாகவும், பின்னர் சில மாற்றங்களுடன் படம் 'கருப்பு' என்ற பெயரில் உருவானதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் மற்றொரு ஹைலைட், சூர்யா - திரிஷா கூட்டணி. பல வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்தது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.
தயாரிப்பு நிறுவனம்
அதோடு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு, சாய் அபயங்கரின் இசை, ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தன. படத்தின் கதை பார்த்தால், சமூக நீதி, சட்ட அமைப்பின் குறைகள், ஏழை மக்களின் போராட்டம், கிராமிய தெய்வ நம்பிக்கை ஆகியவற்றை மையமாக வைத்து கமர்ஷியல் பாணியில் உருவாக்கப்பட்டிருப்பதே ரசிகர்களை கவர்ந்த முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கருப்பு பட கதை
குறிப்பாக கருப்பசாமி வழிபாட்டை மாஸ் எலிமெண்டுகளுடன் இணைத்து ஆர்.ஜே. பாலாஜி காட்சிப்படுத்திய விதம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலில் மே 14-ஆம் தேதி படம் வெளியாக வேண்டியிருந்தது. ஆனால் தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிப்போனது.
அந்த சமயத்தில் ஆர்.ஜே. பாலாஜி கண்கலங்கியபடி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. "இவ்வளவு உழைத்த படம் இப்படி தடைபடுகிறது" என்ற ஏமாற்றம் அவரது முகத்தில் தெரிந்தது. பல திரைப்பிரபலங்களும் அவருக்கு ஆறுதல் கூறினர். அதன் பிறகு பிரச்சனைகள் சரியாகி மே 15-ஆம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியானது.
வெளியான முதல் காட்சியிலிருந்தே படம் சூப்பர் ரெஸ்பான்ஸ் பெற்றது. "சூர்யாவுக்கு இது தரமான கம்பேக்", "பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் சூர்யா திரும்பி வந்திருக்கிறார்" என்ற கருத்துகள் சமூக வலைதளங்களை நிரப்பின. குடும்ப ரசிகர்கள் முதல் மாஸ் ரசிகர்கள் வரை அனைவரும் படத்தை கொண்டாட ஆரம்பித்தனர்.

கருப்பு படம் வசூல் நிலவரம்
இப்போது வசூல் நிலவரம் இன்னும் ஆச்சரியப்பட வைக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk தகவல்படி, ஐந்தாவது நாளில் மட்டும் 'கருப்பு' இந்தியாவில் சுமார் 12.75 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. நான்காவது நாளை ஒப்பிடும்போது கொஞ்சம் குறைவு இருந்தாலும், வார நாட்களில் இது மிகவும் ஸ்ட்ராங்கான வசூலாகவே பார்க்கப்படுகிறது.
மொத்தமாக ஐந்து நாட்களில் இந்தியாவில் மட்டும் படம் 110 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாகவும், உலகளவில் 161 கோடி ரூபாயை கடந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த வேகத்தை பார்த்தால் இன்னும் ஓரிரு நாட்களில் படம் 200 கோடி கிளப்பில் இணைந்து விடும் என திரை வட்டாரங்கள் கணிக்கின்றன.
சூர்யாவின் சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் சாதிக்காத நிலையில், 'கருப்பு' அவரது மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தியிருக்கிறது என்றே கூறப்படுகிறது. இந்த வெற்றியால் சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என்ற கோரிக்கையும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கருப்பு படம் ஓடிடி
படத்தின் ஓடிடி வெளியீடு குறித்தும் ரசிகர்கள் ஏற்கனவே ஆர்வமாக பேச ஆரம்பித்துவிட்டனர். திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், டிஜிட்டல் வெளியீட்டிலும் படம் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மொத்தத்தில், பல வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு 'கருப்பு' வெறும் ஹிட் படம் அல்ல... சூர்யாவின் மறுபிறப்பு என்றே சொல்லலாம்.














Click it and Unblock the Notifications