பிரம்ம முகூர்த்தத்தில் பூமி பூஜை.. அதிகாலையில் மாலையும் கழுத்துமாக ஆனந்த்! தவெக மாநாடு ஏற்பாடு ஜோர்!
விழுப்புரம் : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் நடைபெறுகிறது. இந்நிலையில் முதல் மாநில மாநாட்டிற்கான பந்தல்கால் அதிகாலை 4.30 மணிக்கு ஊன்றப்பட்ட நிலையில் பூஜைகளில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.
செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதை அடுத்து மாநாட்டை நடத்துவதற்காக தீவிர ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்தனர். மாநாட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என உச்சகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதினார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர காலங்களில் மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? என கேட்கப்பட்டது.
இதனையடுத்து மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்த நிலையில், தற்போது மாநாடு தள்ளிப் போனது. மாநாட்டுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் செப்டம்பர் மாதம் பாதி கடந்துவிட்ட நிலையில், தற்போது அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். இதனையடுத்து மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
தற்போது மாநாட்டுக்கான முதற்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று புஸ்ஸி ஆனந்த் மாநாடு தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தொடர்ந்து காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என அவர்கள் தரப்பில் கூறப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநாட்டுக்கு தொடக்க நிகழ்ச்சியாக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 4.30 மணிக்கு நடைபெற்றது.
மாநாட்டு பந்தல், பார்க்கிங், சமையல் கூடம், நுழைவாயில் என பல்வேறு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில் நாளையே அவற்றை அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, வேள்வியுடன் கணபதி பூஜை தொடங்கியது. தொடர்ந்து பந்தல் காலுக்கு மஞ்சள் சந்தனம், பட்டுத் துணி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து பந்தல் கால் ஊன்றப்பட்ட போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகமாக முழக்கமிட்டனர். பூஜையில் விஜய் கலந்து கொள்ளாத நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். அதில் புஸ்ஸி ஆனந்துக்கு மட்டுமே மாலை அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications