ராமதாஸ் சேருக்கு கீழே ‘பக்’..ஒட்டு கேட்கும் மெஷினை கண்டுபிடித்தது எப்படி? போலீசில் ஒப்படைத்த ஏஜென்சி
விழுப்புரம்: தனது வீட்டில் யாரோ ஒட்டு கேட்கும் கருவியை வைத்திருந்ததாகவும் தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் அதனை கண்டறிந்ததாக கூறியிருக்கிறார் பாமக நிறுவனரான ராமதாஸ். இந்த நிலையில் அந்த ஒட்டு கேட்கும் கருவியை பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினர் இன்று கிளியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அதனை வைத்தவர்கள் யார்? என்பதையும் கண்டுபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி மோதல் வலுத்து வருகிறது. தந்தை மகன் இடையேயான மோதல் தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்றிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கிய ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாசை கட்சியின் தலைவர் ஆக்கினார்.
அதற்கு முன்னதாகவே மத்திய அமைச்சராகவும் ஆக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சில விவகாரங்களால் தந்தை மகன் இடையே மோதல் எழுந்தது. தொடர்ந்து அந்த பிளவு அதிகமான நிலையில் தற்போது மோதலாக வெடித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் மாநாட்டுக்கு முன்னதாக கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ். தொடர்ந்து மாநாட்டிலும் அதற்குப் பிறகு ஊடக சந்திப்புகளிலும் அன்புமணி ராமதாஸ் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். அதே நேரத்தில் ராமதாஸ் குறித்து இதுவரை அன்புமணி எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கியும் வருகிறார் ராமதாஸ். இதுவரை 150-க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டிருக்கின்றனர். அதே நேரத்தில் அவர்கள் பதவியில் தொடர்வதாக அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் தான் வழக்கம் போல் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தனது இருக்கைக்கு அடியில் அந்த கருவி இருந்ததாக கூறியிருக்கிறார்.
உண்மையில் ராமதாஸ் வீட்டில் பேசும் விஷயங்கள் அனைத்தும் வெளியே கசிந்ததாகவும், வேலையாட்கள், பணியாளர்கள், ஓட்டுநர் உட்பட அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு முக்கிய நிர்வாகிகளுடன் பேசிய பேச்சு கூட கசிந்த நிலையில் யாரோ தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்து இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போதுதான் ராமதாஸின் இருக்கைக்கு அடியில் ஒரு ஒட்டு கேட்கும் கருவி இருந்திருக்கிறது. லண்டனில் இருந்து அந்த கருவி வரவழைக்கப்பட்டதாக ராமதாஸ் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் டாக்டர் ராமதாஸ் ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக தெரிவித்து இருந்தார். அவர்கள் ஒட்டு கேட்கும் கருவியை சென்னைக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர். மேலும் ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக பாமக சார்பாக சைபர் கிரைம் போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது. சைபர் க்ரைம் ஏடிஎஸ்பி தினகரன் தலைமையிலான கிளியனூர் போலீசார் மற்றும் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் ஆகியோர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் உள்ள ஊழியர்கள், உதவியாளர்களிடமும், விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் ஒட்டு கேட்கும் கருவி வந்த பிறகு மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சென்னையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தனியார் துப்பறியும் நிறுவனம் டாக்டர் ராமதாஸிடம் இந்த கருவியை ஒப்படைத்தது. இதனையடுத்து இன்று பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் ஒட்டு கேட்கும் கருவியை கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளர் கலையரசியிடம் ஒப்படைத்தார்.












Click it and Unblock the Notifications