விக்கிரவாண்டி தேர்தல் படுஜோர்..திமுக போடும் மாஸ் ப்ளான்! பாமக, நாதக யோசிக்கவே இல்லையே! சூப்பர் சிக்ஸ்!
விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு ஜூலை 10ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ளது. எனவே, அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளிட்டோரிடம் அந்தந்த துறை அமைச்சர்கள் மூலம் ஆதரவு திரட்டி வருகிறது திமுக.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி மரணமடைந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

ஒரு மாதத்திற்கு உள்ளாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் பரபரப்பில் உள்ளன. அதே நேரத்தில் முதல் கட்சியாக திமுக தேர்தலில் போட்டியிடும் என்றதோடு வேட்பாளராக அன்னியூர் சிவாவையும் அறிவித்தது.
இதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி.அன்புமணியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாரமும் தொடங்கியுள்ளது. குறிப்பாக திமுக, நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் தலைவர்கள் அங்கு களத்தில் இறங்கி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திமுகவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சித் தலைவர்கள், பாமகவுக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவுக்கு ஆதரவாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அங்கு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பொதுக் கூட்டங்கள், துண்டு பிரசாரம், சாலைகளில் பேரணி செல்வது போன்ற யுக்திகள் மூலமாக அரசியல் கட்சிகள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாமக, நாதகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் திமுக புதுவித யுக்தியைக் கையாண்டு வருகிறது. நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய இருக்கும் நிலையில் பாமக, நாம் தமிழர் பொதுமக்களை நேரிடையாகச் சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறது. ஆனால் திமுகவோ மொத்தமாக வாக்குகளை அள்ளும் வகையில் திட்டமிட்டு களமாடி வருகிறது. அந்த வகையில் பலதரப்பட்ட சங்கங்கள், சமுதாய அமைப்புகள், அரசு ஊழியர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளிட்டோரை வேட்பாளர் உடன் அமைச்சர்கள் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மேலும், ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள், சுகாதாரத்துறை, வணிகர்கள், சமுதாய தலைவர்களை அந்தந்த துறை அமைச்சர்கள் மூலம் சந்தித்து ஆதரவு பெற்று வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கமும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் திட்டங்களையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பல்வேறு சாதனைகளையும் மக்களிடத்தில் கொண்டு செல்லுங்கள் என தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் ஜீவா கேபிள் டிவி கேட்டுக் கொண்டுள்ளார்.
நேறு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் கலந்து கொண்டனர். விரைவில் அரசு கேபிள் டிவியில் பல்வேறு மாற்றங்களை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்துள்ள நிலையில், திமுக வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications