எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி.. விஜய்க்கு உதயநிதி மறைமுக பதிலடி
விழுப்புரம்: எந்த திசையில் யார் வந்தாலும், வடக்கில் இருந்து வந்தாலும் சரி.. லோக்கலில் இருந்து வந்தாலும் சரி.. யாராக இருந்தாலும்.. எப்பேர்பட்ட கூட்டணி அமைத்தாலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருவெண்ணெய்நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச்சிலையை இன்று மாலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- எல்லாருக்கும் நன்றி.. இன்றிலிருந்து நாம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குவோம். நம் திட்டங்கள் எல்லாத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளிகள் இருக்காங்க. அவர்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு பிரச்சாரத்தை தொடங்குவோம்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் யாராக இருந்தாலும், எதிர்த்து யார் வந்தாலும், எப்பேர்பட்ட கூட்டணி அமைச்சாலும், எந்த திசையில் இருந்து வந்தாலும், டெல்லியில் இருந்து வந்தாலும் சரி.. லோக்கலில் இருந்து வந்தாலும் சரி.. அவர்களுக்கு திமுக வெற்றியை மட்டுமே கொடுக்கும் என்று நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த மாநாட்டில் பேசிய விஜய், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறினார். மேலும் திமுக தான் அரசியல் எதிரி என்றும் கூறினார். மேலும் விஜய் மாநாடானது பெரிய அளவில் பேசப்பட்டது. சுமார் 8 லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் மறைமுகமாக உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக விழுப்புரம் வந்த உதயநிதிக்கு வழிநெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பாக நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தன் வாழ்நாள் எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழைப் போற்றும் வகையில், சட்டமன்றத் தொகுதிகள் தோறும் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைகளை திறந்து வைக்க வேண்டும் என்று கழகத் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்பேரில், விழுப்புரம் தெற்கு மாவட்டக்கழகம் சார்பில் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருவெண்ணெய்நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச்சிலையை இன்று மாலை திறந்து வைத்தோம். கடல் போல திரண்டிருந்த திருவெண்ணெய்நல்லூர் மக்களிடையே கலைஞரின் புகழையும், அவர் வழியிலான திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களை எடுத்துரைத்து உரையாற்றினோம். கலைஞர் புகழ் ஓங்கட்டும்! என்று தெரிவித்து இருந்தார்.

மற்றொரு ட்வீட் பதிவில், விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது, அரசூர், திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளில் சிறப்பான வரவேற்பை அளித்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், இளைஞரணி தம்பிமார்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications