என்ன காரணம்?.. முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராகவில்லை.. 8ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் டிஜிபி மீதான வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகிய இருவருமே விழுப்புரம் கோர்ட்டில் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்பதால், இந்த வழக்கினை வரும் 8ம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.. அத்துடன் சம்பந்தப்பட்ட இருவரும் அன்றைய தினம் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் உதவியாக இருந்ததாக கூறி, அவர் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். .

பரபரப்பு
இதையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் தொடர்ந்து இருந்து வருகிறது...

விசாரணை
இந்நிலையில், 3 தினங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை..கண்ணன் மட்டும் ஆஜராகியிருந்தார்... எனவே, முன்னாள் டிஜிபி ஆஜராவாததற்கு கடும் கண்டனத்தை கோர்ட் தெரிவித்திருந்தது.. மேலும், 15 நாள் அவகாசம் கேட்டு முன்னாள் டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆஜர்
மேலும் நவம்பர் 1ம் தேதிக்கு அதாவது நேற்றைய தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, முன்னாள் டிஜிபி கண்டிப்பாக ஆஜராக வேண்டும், அவ்வாறு அன்றைய தினம் அவர் ஆஜராகாத பட்சத்தில் அவருக்குப் பிடி ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்... அதன்படியே நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் கோர்ட்டில் முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜரானார்.. அதேபோல கண்ணனும் ஆஜரானார்.

ஒருதலைப்பட்சம்
அப்போது, பெண் எஸ்பி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் பார்க்கும்படியும், படிக்கும் படியாக தெளிவாக இல்லை, அதனை தெளிவாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சிசிடிவி கண்காணிப்பு காட்சிப் பதிவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முன்னாள் டிஜிபி தரப்பில் கோரப்பட்டது. மேலும், சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை, ஒருதலைப்பட்சமான விசாரணையை சிபிசிஐடி போலீஸார் மேற்கொண்டனர் என்றும் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வாதாடியது.

குற்றச்சாட்டு
ஆனால், அதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது... இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு கேட்ட ஆவணங்களை இன்றைய தினம் பென்டிரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி இன்றைய தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்திருந்தார். அதன்படியே, இன்று காலை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஒத்திவைப்பு
ஆனால், முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகிய இருவருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து வரும் 8ம் தேதி இருவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும், அன்றைய தினம் இருவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். வரும் 8ம் தேதி இருவரும் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications