பிரபல ஓட்டலில்.. தொங்குதே "வால்"? சாம்பாரை சாப்பிட்டதுமே பொத்தென விழுந்த 3 பேர்.. திணறிய விழுப்புரம்
விழுப்புரம்: விழுப்புரம் ஓட்டலில் நடந்த சம்பவம் ஒன்று, பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்படுத்திவிட்டது.
கர்நாடகாவில் பானிபூரி விவகாரத்தையடுத்து, தமிழகத்திலும் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.. பானிபூரிகளில் "பச்சை கலர்" செயற்கை நிறமிகள் கலக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, இந்த ஆய்வு நடந்து வருகிறது.

பழைய எண்ணெய்: நேற்றைய தினம்கூட, தூத்துக்குடி மாவட்டத்திலும் ஆய்வு நடந்தது. அப்போது, வேலவன் ஹைப்பர் மார்க்கெட் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபல கேஎஃப்சி சிக்கன் நிறுவனத்தின் ஓட்டல்களிலும் அதிகாரிகள் சோதனை செய்தபோது, கெட்டுப்போன பழைய எண்ணெய்களைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக், இதை பயன்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய், 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் வைக்கப்பட்டிருந்த 56 கிலோ கோழிக்கறியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.. சம்பந்தப்பட்ட ஓட்டலின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதிகாரிகள்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை தமிழகத்திலுள்ள ஓட்டல்களுக்கு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்கள்.. சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியும்கூட, பல்வேறு ஓட்டல்களில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லையாம்.
நேற்றைய தினம், விழுப்புரத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. விழுப்புரத்தில் திருச்சி சாலையில், அந்த பிரபல ஓட்டல் செயல்பட்டு வருகிறது.. பிரதான சாலையில் அமைந்துள்ளால், எப்போதுமே கஸ்டமர்கள் இந்த ஓட்டலில் அதிகளவில் நிறைந்திருப்பார்கள்.
சாம்பார்: இந்த ஓட்டலுக்கு நேற்று காலையில் ஏராளமானோர் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சாப்பிட்டு கொண்டிருந்த ஒருவர், சாம்பார் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்படியே அவரது இலையில் சாம்பார் ஊற்றப்பட்டுள்ளது.
அப்போது அதில் ஏதோ வெள்ளையாக பொத்தென்று விழுந்துள்ளது.. அதை உற்று பார்த்தபோதுதான், இறந்த பல்லி என்று தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர், உடனே இதுபற்றி ஓட்டல் ஊழியர்களிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.
ஓட்டல் ஊழியர்கள்: இதையடுத்து, அதே ஓட்டலில் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்த 3 பேருக்கு திடீரென மயக்கமும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது.. விழுப்புரம் ஆசாகுளத்தை சேர்ந்த ஆனந்த் (வயது 49), கண்டாச்சிபுரம் திருமலைப்பட்டை சேர்ந்த கோவிந்தசாமி (60), குணசேகர் (35) ஆகியோருக்கு லேசான மயக்கம் ஏற்படுவதாகவும், வாந்தி வருவதாகவும் ஓட்டல் ஊழியர்களிடமே சொல்லியிருக்கிறார்கள்.
உடனே அவர்கள், 3 பேரையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. அங்கு 3 பேருக்குமே உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் குணமாகி வீடு திரும்பினர். இந்த தகவல் பரபரப்பாக பரவியதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு, விழுப்புரம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஸ்டாலின் ராஜரத்தினம் விரைந்து சென்றார்.
விசாரணை: சாம்பாரில் எப்படி பல்லி விழுந்தது? என்ற விசாரணையையும் ஆரம்பித்தார்.. ஓட்டலுக்கு 2 நாள் லீவு விடப்பட வேண்டும் என்று ஓட்டல் ஓனருக்கு அறிவுறுத்தியதுடன், ஓட்டலில் சமையல் செய்யும் இடம் மற்றும் ஓட்டலின் பின்புற பகுதியை சுகாதாரமாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தினார்.
உணவு சமைக்கும்போது பாதுகாப்பான முறையிலும், சுகாதாரமான முறையிலும் தயார் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துவிட்டு சென்றார். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.












Click it and Unblock the Notifications