செஞ்சி சிறுமி, தனிஷ்க் கொள்ளை, சுள்ளான் மதன் கொலை.. மூன்று சம்பவங்களையும் இணைக்கும் ஒரு புள்ளி!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய மூன்று முக்கியக் குற்றச் சம்பவங்கள் ஒட்டுமொத்த மாநிலத்தையுமே உலுக்கியுள்ளன. இந்த 3 சம்பவங்களுக்கும் பின் முக்கியமான ஒரு காரணம் இருப்பதாக சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கு, மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நடந்த மெகா கொள்ளை, மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் ரவுடி சுள்ளான் மதன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் ஆகிய மூன்றும் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக நடந்தவை.

villupuram crime

ஆனால், இந்த மூன்று சம்பவங்களுக்கும் இடையே இருக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை, காவல்துறையின் ரோந்துப் பணி மற்றும் கண்காணிப்புக் குறைபாடுகள்தான் என்ற விமர்சனம் இப்போது வலுத்துள்ளது.

செஞ்சி சிறுமி மாயம் - கண்காணிப்பு இல்லாத சாலைகள்

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில், தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு இரவு வீட்டில் தூங்கிய 7 வயது சிறுமி ஹேமலதா (ஹேமாவதி) அதிகாலையில் மாயமான சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் துப்பு துலங்கவில்லை. இந்த வழக்கு தற்போது சிபிசிஐட வசம் ஒப்படைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஆலம்பூண்டி கிராமமும், அதை ஒட்டியுள்ள நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற இணைப்புச் சாலைகளும் போதிய சிசிடிவி கேமராக்களோ, இரவு நேர நெடுஞ்சாலை ரோந்துப் பணியோ இல்லாத பகுதிகளாக இருந்துள்ளன. இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித் திரியும் நபர்களைத் தடுக்கும் வகையில் ரோந்துப் பணி இருந்திருந்தால், அந்தப் பகுதியில் நடந்த அசம்பாவிதத்தைத் தடுத்திருக்க முடியும் அல்லது தடயங்களாவது சிக்கியிருக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முக்கியமாக அந்த சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் ரோந்து பணி இல்லை.

மதுரை தனிஷ்க் கொள்ளை - ரோந்து இல்லாத நேரத்தை நோட்டமிட்ட திருடன்

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திலும் இதே கதைதான் நடந்துள்ளது. அதிகாலை நேரத்தில் அந்தப் பகுதியில் போலீஸ் ரோந்துப் பணி முறையாக இல்லாததைப் பல நாட்கள் நோட்டமிட்ட பிறகே, யூடியூபர் நிஷாந்த் இந்தக் கொள்ளையைத் துணிந்து அரங்கேற்றியுள்ளார்.

கடைக்குப் பின்புறம் சிசிடிவி இல்லாததும், அதிகாலை நேரத்தில் அந்தச் சாலையில் காவல்துறை ரோந்து வாகனம் வராததும் கொள்ளையன் எந்தவிதப் பதற்றமும் இன்றி சாவகாசமாக நகைகளை அள்ளிச் செல்ல வசதியாக அமைந்துவிட்டது.

சுள்ளான் மதன் கொலை - தெரிந்தும் தவறவிட்ட கண்காணிப்பு

சிவகங்கை மாவட்டம் மேலமங்கலத்தில் வடமஞ்சுவிரட்டு பார்க்கச் சென்ற சரித்திரப் பதிவேடு ரவுடி 'சுள்ளான்' மதன், 11 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், மதன் மீது ஏற்கனவே இரட்டைக் கொலை உள்ளிட்ட 15 வழக்குகள் இருந்ததும், எதிர்தரப்பினரால் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் என்பதும் காவல்துறைக்கு முன்பே தெரிந்த விஷயம்தான்.

ஜாமீனில் வெளியே வந்த மதன், மஞ்சுவிரட்டு போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பது தெரிந்திருந்தும், அந்தப் பகுதியில் போதிய போலீஸ் ரோந்து மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு இல்லாததால், ஆயுதங்களுடன் வந்த கும்பல் சர்வ சாதாரணமாகக் கொலையைச் செய்துவிட்டுத் தப்பியது.

இணைக்கும் புள்ளி என்ன?

செஞ்சி சிறுமி வழக்கில் நெடுஞ்சாலை ரோந்து இல்லாதது, மதுரை நகைக்கடை கொள்ளையில் அதிகாலை ரோந்து இல்லாதது, சிவகங்கை கொலையில் ஆபத்து இருப்பது தெரிந்தும் மஞ்சுவிரட்டுப் பகுதியில் கண்காணிப்பு இல்லாதது என இந்த மூன்று சம்பவங்களுமே காவல்துறையின் தடுப்பு ரோந்துப் பணி பலவீனமாக இருப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன.

குற்றம் நடந்த பிறகு தனிப்படை அமைத்துத் துப்பு துலக்குவதை விட, குற்றம் நடப்பதற்கு முன்பே இரவு மற்றும் பகல் நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+