‛ஏய் லூசு’.. திமுக நிர்வாகியை திட்டிய அமைச்சர் பொன்முடி! விழுப்புரத்தில் டென்ஷன்! கிளம்பிய விவாதம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விழா ஏற்பாடுகளை சரியாக செய்யவில்லை எனக்கூறி திமுக நிர்வாகியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிந்து கொண்டார். மேலும் அவர் திமுக நிர்வாகியை ‛ஏய் லூசு' என திட்டிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவரது மகன் கவுதம் சிகாமணி. இவர் கள்ளக்குறிச்சி எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் சமீபத்தில் பொன்முடி, கவுதம் சிகாமணி ஆகியோரின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இருவரும் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனைக்கு பிறகு பொன்முடி, கவுதம் சிகாமணி ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணையும் மேற்கொண்டனர்.
இது அமைச்சர் பொன்முடிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலிலும் பொன்முடி விழுப்புரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தான் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரியில் இயங்கும் வாகனம் வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். பேட்டரியில் இயங்கும் ஆட்டோக்களை பச்சை கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் பேச மைக் கேட்டுள்ளார். மைக் வழங்கப்படாமல் இருந்துள்ளது. அதோடு மேடையும் அங்கு அமைக்கப்படவில்லை. இதனால் அமைச்சர் பொன்முடி கடும் கோபமடைந்தார்.
இதையடுத்து விழா ஏற்பாடு செய்த திமுக நிர்வாகியை அவர் கடிந்து கொண்டார். அப்போது அவர் ஒருமையில் திட்டி ‛‛ஏய் லூசு'' என்ற வார்த்தையை பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.
அமைச்சர் பொன்முடி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அரசு நகர பேருந்துகளில் மகளிர் இலவச பயண திட்டத்தை ‛ஓசி' என அவர் பேசியதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அந்த வரிசையில் தற்போது இந்த வீடியோ விவாதத்தை கிளப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications