ரூ.3 லட்சம் தரும் தமிழக அரசு.. முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிப்பது எப்படி? அரசு அதிகாரி தகவல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி தெரிவித்தார். அதேநேரம் மக்கள் மருந்தகம் அமைக்க எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன நன்மைகள், அரசு தரும் மானியங்கள் என்ன என்பதையும் விவரித்தார். விண்ணப்பிப்போருக்கு அரசு 3 லட்சம் ரூபாய் வழங்கும் என்றும் கூறினார்.
B.Pharm/D.Pharm படித்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் எப்படி இணைவது என்பது குறித்து விழுப்புரம் அரசு அதிகாரி விளக்கி உள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 15.8.2024 அன்று சுதந்திர தினவிழா உரையில், "பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 எண்ணிக்கையில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் " என அறிவித்தார்.
இதன்படி முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm/D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர் வருகிற 20.11.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது: முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்து வரி ரசீது அல்லது குடிநீர் வரி ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது, வாடகை இடம் எனில் இடத்திற்கான உரிமையாளரிடம் இடம் ஒப்பந்தப்பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
மானியம்: முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகையும் செய்யப்படும்.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.5 லட்சம் உடனடியாக விடுவிக்கப்படும். அடுத்ததாக முதல்வர் மருந்தகம் அமைக்க தேர்வு செய்யப்படும் தொழில் முனைவோர் முதல்வர் மருந்தகத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவ வேண்டும். அதன்பின்னர் இறுதிக்கட்ட மானியம் ரூ.1.5 லட்சம் மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும். விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகையும் செய்யப்படும்"இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications