விழுப்புரத்தில் இறுதிச்சடங்கில் அதிசயம்.. ஆம்புலன்சில் இருந்து இறக்கிய போது கண் விழித்த தொழிலாளி
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கிராமத்தில் தொழிலாளி இறந்து விட்டதாக அவரது உறவினர் ஒருவர், மருத்துவமனையில் இருந்தபடி கிராமத்தில் உள்ள மற்ற உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அந்த தொழிலாளியின் வீட்டு முன்பு சாமியானா பந்தல் போடப்பட்டதுடன் தொழிலாளியின் உடலை வைப்பதற்காக சவப்பெட்டியும் கொண்டு வரப்பட்டது. இறுதிசடங்குக்கு அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். ஆம்புலன்சில் இருந்து தொழிலாளியை இறக்கிய போது கண் விழித்து கை, கால்களை அசைத்ததால் அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்
விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 40 வயது கூலித்தொழிலாளி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை நேற்று மோசமானது. இதுபற்றி அந்த தொழிலாளியின் குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியிருக்கிறார்கள்.

அதனை தொடர்ந்து தொழிலாளியை வீட்டுக்கு அழைத்து செல்வதாக அவரது உறவினர்கள் கூறினர். அதன்படி தொழிலாளியை டிஸ்சார்ஜ் செய்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுப்பி வைத்துள்ளார்கள். இந்நிலையில் தொழிலாளி இறந்து விட்டதாக அவரது உறவினர் ஒருவர், மருத்துவமனையில் இருந்தபடி கிராமத்தில் உள்ள மற்ற உறவினர்களுக்கு கூறினார்.
இதன் காரணமாக தொழிலாளியின் வீட்டு முன்பு சாமியானா பந்தல் போடப்பட்டது. மேலும் தொழிலாளியின் உடலை வைப்பதற்காக சவப்பெட்டியும் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அத்துடன் அவரை புதைப்பதற்காக குழியும் தோண்டப்பட்டது. மேலும் இறுதிசடங்கு செய்வதற்கான ஏற்பாட்டிலும் அவரது உறவினர்கள் செய்தனர்.
இறுதி சடங்கிற்கு தேவையான பொருட்கள், பூமாலைகள் உள்ளிட்டவற்றை வாங்கி தயாரானார்கள். அத்துடன் தொழிலாளியின் வீட்டின் முன்பு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அழுதபடி சோகத்தில் இருந்தனர். இதனிடையே ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட தொழிலாளியை உறவினர்கள் கீழே இறக்கிய போது அவர் கண் விழித்து கை, கால்களை அசைத்துள்ளார். அவருக்கு நாடித்துடிப்பும் இருந்தது. இதைப்பார்த்த உறவினர்கள், தொழிலாளி உயிரோடு இருப்பதை கண்டு ஒரு கணம் அதிர்ச்சியடைந்தாலும், பெரும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
இதையடுத்து சிகிச்சைக்காக தொழிலாளியை அதே ஆம்புலன்சில் அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications