வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வெளியே வரலாம்.. வாகனங்களுக்கு பெயிண்ட்.. விழுப்புரத்தில் புதிய திட்டம்!
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே செல்வதை தடுக்கும் வகையில், மக்கள் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் வீடுகளை விட்டு வெளியே வரும் புதிய திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் வாகனங்களுக்கு வண்ண பெயிண்ட்டும் பூசப்படுகிறது.
Recommended Video
டெல்லி மத மாநாட்டில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், கடந்த 4 ஆம் தேதி 51 வயதுடைய தலைமை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மாவட்டத்தில் மொத்தம் 23 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கையாக 1,977 பேர் வீடுகளில் தனிமைபடுத்தபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலும், பொதுமக்கள் அத்தியாவசியவசிய தேவைகளின்றி வீதிகளில் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் குறிப்பிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மட்டும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் வீடுகளை விட்டு வெளியே வந்து காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வாங்க அனுமதிக்கப்படும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


அதன்படி குடும்பத்தில் ஒருவா் மட்டும் வாரத்துக்கு ஒரு நாள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக விழுப்புரம் நகராட்சிகுட்பட்ட 35 வார்டுகள், 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நீலம், ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், ஊதா, வெள்ளை ஆகிய நிறங்களில் அனுமதி அட்டைகள் அச்சிடப்பட்டு , வீடுகள்தோறும் வழங்கப்பட்டுள்ளது.

முதல் நாளான இன்று நாப்பாளையத் தெரு, அய்யனாா்குளம், திரு.வி.க. வீதி, ஜி.ஆா்.பி.தெரு, பாகா்ஷா வீதி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க வெளியே வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இன்று குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வெளியே வரும்போது, அவர்களுடைய வாகனங்களுக்கு வண்ண பெயிண்ட் பூசப்படுகிறது.

இன்று வரும் வாகனங்கள் அடுத்த திங்கட்கிழமைக்கு முன் மீண்டும் வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,174 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2,356 இரு சக்கர வாகனம், 49 மூன்று சக்கர வாகனம் மற்றும் 32 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications