மாற்றுக் கட்சி என சொல்லிட்டு Extra luggage ஆக வரல.. என்னோட டார்கெட் இதுதான்! அடித்து சொன்ன விஜய்
விக்கிரவாண்டி: மாற்றுக் கட்சி என சொல்லிட்டு பத்தோடு பதினொன்று என்று சொல்லிக்கொண்டு Extra luggage ஆக வரல.. என்னோட டார்கெட்டே வேற.. என்று விஜய் அழுத்தம் திருத்தமாக கூறினார். மேலும் பாஜகவையும் திமுகவையும் நேரடியாக விமர்சித்து பேசினார். தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கிற ஒரு குடும்பம், சுயநலக்கூட்டம்தான் நமது அடுத்த எதிரி என்றும் விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு வந்த விஜய் உற்சாகமாக காணப்பட்டார். லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வாக் செய்த விஜய், தொண்டர்கள் வீசிய துண்டுகளை கழுத்தில் போட்டுக்கொண்டு உற்சாகமாக கை அசைத்தார். தொடர்ந்து அங்கு 101 அடியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் மாநாட்டு மேடையில் நின்றபடி சுவிட்சை அழுத்தி கொடி ஏற்றினார்.

தொடர்ந்து இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் பற்றி விஜய் அறிவித்தார். விஜய் மாநாட்டில் பேசும் போது உணர்ச்சி பொங்க பேசினார். பாஜகவையும் திமுகவையும் நேரடியாக விமர்சித்தார். இந்த நாட்டையே பாழ்ப்படுத்துகிற, பிளவுவாத அரசியல் செய்கிறவர்கள்தான் தமிழக வெற்றி கழகத்தின் முழுமுதற் ஒரே கொள்கை எதிரி. அடுத்து திராவிட மாடல் என்று சொல்லி கொண்டும், பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொண்டும் தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கிற ஒரு குடும்பம், சுயநலக்கூட்டம்தான் நமது அடுத்த எதிரி. அரசியல் எதிரி" என விஜய் பேசினார்.
தொடர்ந்து பேசிய விஜய், மாற்றுக் கட்சி என சொல்லிட்டு பத்தோடு பதினொன்று என்று சொல்லிக்கொண்டு Extra luggage ஆக வரல.. என்னோட டார்கெட்டே வேற.. பேக் அடிக்குறதுக்கு எல்லா வாய்ப்பே இல்ல.. என அடித்து பேசினார். விஜய் பேசியதாவது:- இங்க ஏற்கனவே இருக்கிற அரசியல் கட்சிகளில் பத்தோடு பதினொன்றாக என்னை ஒரு மாற்று சக்தி என்று சொல்லிக்கிட்டு.. எக்ஸ்ட்ரா லக்கேஜாக எல்லாம் நான் இங்க வரல ப்ரோ...
நம்ம நாட்டுக்கு கேடு செய்கின்ற.. இன்னும் எக்ஸ்ட்ரா.. எக்ஸ்ட்ரா.. வேலை எல்லாம் ஈசியா செஞ்சுட்டு.. மக்கள் மத்தியில் தங்களை மாபெரும் சக்தியாக நினைத்துக்கொண்டிருக்கிற.. மிகப்பெரிய ஏமாற்று சக்திகளோட பிடியில் இருந்து தமிழ்நாட்டை முழுமையாக மாத்துகிற முதன்மை சக்தியாக இருந்து உங்களுடைய மன்னனாக, அண்ணனாக.. தம்பியாக.. தோழனாக.. உங்களில் ஒருத்தரா இருந்து உழைக்க வேண்டும். இது தான் என்னுடைய டார்கெட்.. இவ்வாறு விஜய் பேசினார்.
முன்னதாக விஜய் பேசுகையில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. இங்க யாரும், மேலே கீழ என்ற எந்த பாகுபாடும் பார்க்கப் போவதில்லை. நாம் எல்லோரும் ஒன்றுதான்.. எல்லோரும் சமம்தான்.. அறிவியலும், தொழில்நுட்பமும் மட்டும்தான் மாற வேண்டுமா.. ஏன் அரசியல் மாறக்கூடாதா? ஏற்கனவே உள்ள அரசியல்வாதிகளை பற்றி பேசி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.. அதே நேரம் சும்மா கண்ணை மூடிக்கொண்டு இருக்கவும் போவதில்லை" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications