திமுகவை எதிர்க்க ஓரணி தேவையில்லை.. ஒரே அணி நாம் தமிழர் மட்டும்தான்.. எடப்பாடிக்கு சீமான் பதில்!
விழுப்புரம்: திமுகவிற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல, திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாம் தமிழர் கட்சி தான் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தீமைக்கு மாற்று மற்றொரு தீமை அல்ல என்று கூறிய சீமான், தேசிய கட்சிகள் தமிழ்நாட்டிற்கு எதற்காகத் தேவை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை வீழ்த்த ஒத்த கருத்து உடைய அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என்று கூறி வருகிறார். இந்த கருத்து தவெகவுக்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலமாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையச் சீமான் மற்றும் விஜய் ஆகியோருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்ததாகப் பார்க்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பாக பிரம்மாண்ட கட்சி ஒன்று கூட்டணி வருகிறது என்று கூறி இருந்தார். தமிழ்நாட்டில் அதிக வாக்கு சதவிகிதம் கொண்ட கட்சிகளில் 3வது இடத்தில் இருப்பது நாம் தமிழர் கட்சி தான். அதேபோல் தவெக 2026 சட்டமன்றத் தேர்தலில் எளிதாக மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெறும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த 2 கட்சிகளைக் குறி வைத்தே எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாகவும் கூறி வந்தனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி அழைப்பு தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று திமுக கூறி வருகிறது. திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்று மற்ற கட்சிகள் கூறுகின்றன. தீமைக்கு மாற்று இன்னொரு தீமை அல்ல.
தமிழ்நாட்டிற்குத் தேசிய கட்சிகள் எதற்கு? கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்று காங்கிரஸ், பாஜக கட்சிகள் கூறி வருகின்றன. தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழகத்தை காக்கக் காங்கிரஸ் கட்சி முன் வருமா? தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்தது எந்தக் கட்சி? மாநிலக் கல்வி உரிமையைப் பறித்தது எந்த கட்சி?
மருத்துவப் படிப்பை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது யார் ஆட்சியில் நடந்தது?ஜிஎஸ்டி என்று சுருக்கியது எந்த கட்சியின் ஆட்சி? எந்த விவகாரத்தில் பாஜகவை திமுக எதிர்க்கிறது? இந்திய நிலப்பரப்பில் 81 சதவிகித நிலக்கரி தமிழ்நாட்டில் உள்ளது. இங்கு நிலத்தின் அடியில் உள்ள வளத்தை எடுக்க அனுமதிக்கக் கூடாது. நிலத்தின் வளத்தை எடுத்தால், சுடுகாடாகிவிடும்.
அதிமுக உடனான கூட்டணி என்பது தீமைக்கு மாற்றுத் தீமை கிடையாது. நெருப்பை வைத்து நெருப்பை அணைக்க முடியாது. நாங்கள் நீராக இருப்போம். திமுகவுக்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல. திமுகவை எதிர்க்கும் ஒரே நாம் தமிழர் தான் என்று தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலம் முதலே எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications