குறுக்க இந்த அன்புமணி வந்தா? விறுவிறுப்பாகும் விக்கிரவாண்டி தேர்தல்!மூன்றாவதாக கோதாவில் குதித்த பாமக
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் எனவும், வேட்பாளராக சி.அன்புமணி களமிறங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி வெளியாகின. பாஜக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்திருக்கிறது. அதில் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியும் அடங்கும்.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தி மரணமடைந்த நிலையில் அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு திமுகவே தனது வேட்பாளரை களம் இறக்குகிறது. அன்னியூர் சிவா விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது. அதிமுக இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.
அதே நேரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் கடந்த தேர்தலில் புகழேந்தியிடம் தோற்ற முத்தமிழ்ச் செல்வனே போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுவார் என அறிவித்துள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் எனவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி அவர்கள் போட்டியிடுவார் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்ட முன்னாள் செயலாளரும் தற்போது சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கும் அன்புமணி களமிறங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அது தற்போதே நடந்துள்ளது. அன்புமணி மட்டுமல்லாது பாமக விழுப்புரம் மாவட்ட தலைவர் தங்ஜோதி, விழுப்புரம் மாவட்ட முன்னாள் செயலாளரான புகழேந்தி ஆகிய மூவரில் யாராவது ஒருவர் களமிறக்கப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால் களப்பணி, கட்சியில் சீனியர், தலைமைக்கு நெருக்கம், மக்களிடம் அறிமுகம் உள்ளிட்டவை காரணமாக அன்புமணியே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்காக நேற்று முன் தினம் பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் தைலாபுரத்தில் உள்ள கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கெளரவ தலைவர் ஜி.கே. மணி, மாநில நிர்வாகிகளான வடிவேல் ராவணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே மூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கைச்சூர் ஆறுமுகம், பாமக முன்னாள் பொதுச்செயலாளர் தீரன், மாநில வன்னியர் சங்க தலைவர் பூ.தா அருள்மொழி, பாமக முன்னாள் எம்.பி மருத்துவர் செந்தில், பாமக வழக்கறிஞர் பாலு, மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் எனவும், சி.அன்புமணி வேட்பாளராக களமிறக்க முடிவெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கட்சியின் நிறுவனரான ராமதாஸ். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்து பாமக களம் கண்ட பொழுது போட்டியிட்ட அன்புமணி சுமார் 41428 வாக்குகளை பெற்றார். பதிவான வாக்குகளில் இது 23.19 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications