பாமக கூட்டம்.. காற்று வாங்கிய தைலாபுரம்.. ராமதாஸ் அழைப்பை புறக்கணித்த மாவட்ட நிர்வாகிகள்
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்தக் கூட்டத்துக்கு விரல் விட்டு எண்ணுமளவுக்கு வெகு சில நிர்வாகிகள் மட்டுமே வந்துள்ளனர். அன்புமணி உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் புறக்கணித்துள்ளனர்.
தமிழக அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களில் இறங்கியுள்ளனர். தேர்தல் என்றால் ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை விமர்சிப்பது வழக்கம். தமிழகத்திலும் திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே அப்படியான நிலை தான் உள்ளது. ஆனால் பாமக -வில் மட்டும் சொந்தக் கட்சி பிரச்னை பூதாகரமாகி வருகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரின் மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. ராமதாஸ் மகளின் மகன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவி நியமிக்கப்பட்டதில் மோதல் வெடித்தது. ராமதாஸின் அறிவிப்புக்கு, அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து ராமதாஸ், இது நான் உருவாக்கிய கட்சி. இனி பாமகாவின் தலைவராகவும் நானே செயல்படுவேன் என்று அறிவித்தார். அதற்கு அன்புமணி, நிர்வாகிகளால் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட நான் தான் கட்சியின் தலைவர் என்று பதிலடி கொடுத்தார். கடந்த மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் அருகே வன்னியர் சங்கத்தின் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது.
அதில் ராமதாஸ், அன்புமணி ஒரே மேடையில் அமர்ந்தனர். அதிலும் ஈகோ அதிகம் வெளிப்பட்டது. அந்த மாநாட்டில் முகுந்தனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. 2026 தேர்தல் கூட்டணி விவகாரத்திலும் ராமதாஸ், அன்புமணி இடையே மாறுபட்ட கருத்து நிலவி வருவதாக தகவல் வெளியானது.
மாநாட்டில் பேசிய ராமதாஸ், கட்சியில் உழைக்காமல் பலர் ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். அனைவரின் கணக்கையும் முடித்துவிடுவேன். தேர்தல் கூட்டணியை பற்றி முடிவு செய்ய நான் இருக்கிறேன். அதை நான் தான் முடிவு செய்வேன் என்று கூறியிருந்தார். அதே மேடையில் பேசிய அன்புமணி, என் பின்னால் வாருங்கள். நாம் ஆளும் நேரம் வந்துவிட்டது என்றார்.
இந்நிலையில் பாமக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. தேர்தல் கூட்டணி குறித்து அதில் ஆலோசிக்க திட்டமிட்டதாக கூறப்பட்டது.
ஆனால் இந்த கூட்டத்துக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியானது. காலை 10 மணியளவில் கூட்டம் தொடங்கிய நிலையில் அந்தக் கூட்டத்தை அன்புமணி உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் புறக்கணித்துவிட்டனர். கௌரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட சிலர் மட்டும் கலந்து கொண்டனர்.
மொத்தமாக 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சற்று முன்பு வரை சுமார் 8 பேர் மட்டுமே வந்துள்ளனர். 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வராமல் புறக்கணித்துள்ளனர். அவர்கள் அன்புமணிக்கு ஆதரவாக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "இது கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம். களைப்பாக இருப்பதால் சிலர் வரவில்லை. படுத்துக் கொண்டே 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். தனியாக நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. நிச்சயம் கூட்டணி உண்டு." என்றார்.












Click it and Unblock the Notifications