என் மூச்சு இருக்கும்வரை நானே பாமக தலைவர்.. அன்புமணிக்கு பதவி கிடையாது.. ராமதாஸ் திட்டவட்டம்!
விழுப்புரம்: என் மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு பாமக தலைவர் பதவியை அளிக்க மாட்டேன் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் அன்புமணியே எல்லாத்தையும் எடுத்து கொள்ளட்டும் என்று ராமதாஸ் கூறிய நிலையில், தனது நிலைப்பாட்டை மாற்றி அறிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் ஒவ்வொரு நாளும் அடுத்த உச்சத்தை எட்டி வருகிறது. இருவருக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், அது டிராவில் முடிந்ததாக ராமதாஸ் கூறினார். இதன்பின், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் எல்லாமே அவருக்கு கொடுக்கப்படும். அதுவரை நானே கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பேன் என்று கூறினார்.

ராமதாஸ் பேட்டி
இந்த நிலையில் இன்று மீண்டும் தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும் போது, என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன்.
பாமகவில் குடும்பத்தினர்
ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நல்ல தந்தையாக, வழிகாட்டியாக இருந்துள்ளேன். மாமல்லபுரம் மாநாட்டின் போதும், மாநாட்டுக்கு பிறகு நடப்பதை பார்க்கும் போதும் மிகவும் வருத்தமாக உள்ளது. கடைசி வரை பாமகவின் தலைவர் பதவியில் நான் இருக்க வேண்டும் என்று அனைவரும் சொல்கிறார்கள். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கும், பொறுப்புக்கும் வரக் கூடாது என்று கட்சி தொடங்கும் போது கூறினேன்.
அன்புமணி புலம்பல்
ஆனால் அதனை காப்பாற்ற முடியவில்லை. சிலர் மோசமாக செயல்பட்டதால், 35 வயதில் அன்புமணிக்கு மத்திய அமைச்சராக்க வேண்டியதாயிற்று. 3 ஆண்டுகளிலேயே தன்னால் தாங்க முடியவில்லை என்று கூறினார். அதன்பின் வழிகாட்டல் காரணமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்தார். விருது வாங்கினால் மட்டும் போதாது. பெற்றோரிடமும் விருது பெற வேண்டும்.
மைக்கை தூக்கி அடித்தார்
தாய், தந்தை உயிருடன் இருக்கும் போது அவர்களை கொண்டாட வேண்டும், மதிக்க வேண்டும். இந்த வார்த்தையை அன்புமணியிடம் சொன்னால், நான் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன் என்பார். ஆனால் மைக்கை தூக்கி அடிப்பார்.. பாட்டிலை தூக்கி அடிப்பார்.. இதுதான் மகிழ்ச்சியாக வைத்திருப்பதா? தொண்டர்களை ஹோட்டலில் வைத்துதான் சந்திக்க வேண்டும் என்றார்..
வனவாசம் செல்ல சொல்லவில்லை
யார் ஆரம்பித்த கட்சி இது? அன்புமணியின் செயல்பாடுகள் மாநாட்டிற்கு பின் மிகவும் மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகள் வாழ்வேன் என்று கூறிவிட்டு, மார்பிலும் முதுகிலும் ஈட்டியால் குத்துகிறார். அப்படியான வேதனை.. தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை. ராமரை போல் வனவாசம் செல் என்று சொல்லவில்லை. செயல் தலைவராக இருக்கவே கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications