பாமக தலைமையகம் சென்னையில் இருந்து தைலாபுரத்திற்கு மாற்றம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
விழுப்புரம்: "மே மாதம் 30 ஆம் தேதி முதல் பாமகவின் தலைமை அலுவலகம் தைலாபுரம் தோட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது, தைலாபுரம் தவிர பாமகவிற்கு வேறு எங்கும் தலைமை அலுவலகம் வைக்கக் கூடாது" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தைலாபுரம் என்பது தமிழக அரசியல் களத்தின் முக்கியமான முகவரிகளுள் ஒன்று. தேர்தல் சமயங்களில் இரு பெரும் திராவிடக் கட்சிகளும் தைலாபுரத்துக்கு தூது அனுப்பிய காட்சிகள் ஏராளம். வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் பாமக, தேர்தல் கூட்டணிகளில் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்திருக்கிறது.

தைலாபுரம் தோட்டம்
தைலாபுரத்தில் இருந்து வெளியாகும் பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கைகள் ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்களுக்கு நோட்ஸாக இருந்திருக்கின்றன. என்ன பிரச்சனை என்றாலும் நாள் தவறாமல் ராமதாஸின் அறிக்கைகள் வெளிவரும். போயஸ் தோட்டம், தேனாம்பேட்டை அறிவாலயம் போல, தமிழக அரசியலின் முக்கியமான மையமாக திகழ்ந்தது தைலாபுரம் என்றால் மிகையில்லை.
எனினும், பாமகவின் தலைமையக முகவரியாக தேனாம்பேட்டை தான் இருந்து வந்தது. அண்மையில் ராமதாஸ் உடனான மோதலை தொடர்ந்து, தலைமையக முகவரியான தேனாம்பேட்டையை நீக்கிவிட்டு சென்னை தியாகராய நகரில் இருக்கும் தனது இல்லத்தின் முகவரியை சேர்த்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
ராமதாஸ் - அன்புமணி மோதல்
பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் கடுமையாக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது, பாமகவில் அன்புமணி தரப்பு என்றும் ராமதாஸ் தரப்பு என்றும் இரு பிரிவுகள் உருவாகியுள்ளன.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது நேற்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும் விமர்சித்திருந்தார். பாமகவில் இளைஞர் அணித் தலைவர் பதவிக்கு முகுந்தனை நியமிக்கும் விவகாரத்தில் தாயார் மீது பாட்டில் வீசித் தாக்கினார் அன்புமணி. பாஜகவுடனான கூட்டணிக்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார்.
முகவரி மாற்றம்
இதையடுத்து பாமக அலுவலக முகவரியை அன்புமணி ராமதாஸ் மாற்றினார். அன்புமணி ராமதாஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் பாமக அலுவலகத்தின் முகவரி மாற்றப்பட்டுள்ளது. சென்னை, தி.நகர் தெருவில் உள்ள தனது வீட்டின் முகவரியை கட்சி அலுவலக முகவரியாக அன்புமணி ராமதாஸ் மாற்றினார். மேலும், பனையூரில் தனி அலுவலகத்தை நடத்தி வருகிறார் அன்புமணி.
தைலாபுரத்துக்கு மாற்றம்
இந்நிலையில் பாமக தலைமையகத்தை தைலாபுரத்துக்கு மாற்றி உள்ளார் ராமதாஸ். "சென்னையில் இருந்து பாமக தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பாமகவின் தலைமை அலுவலகம் தைலாபுரம் இல்லத்தில்தான் செயல்படுகிறது. சென்னையிலோ வேறு பகுதியிலோ தலைமை அலுவலகம் வைத்திருந்தால் அது சட்டத்திற்கு புறம்பானது.
பனையூரில் பாமக தலைமையகம் இருப்பதாக சொல்வது, தாங்களாகவே நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டு செயல்படுவது சட்டவிரோதமானது. கட்சி தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications