விக்கிரவாண்டி கொடுமை.. பள்ளியில் பலியான சிறுமி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்
விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் பயிலும் 5 வயது சிறுமி கழிவுநீர்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள நிலையில், சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திண்டிவனத்தில் இசேவை மையம் ஒன்றில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறார் பழனிவேல், இவரது மனைவி சிவசங்கரி. இந்த தம்பதிக்கு லியா லட்சுமி என்ற பெண் குழந்தை இருந்துள்ளார். இந்த குழந்தை விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளது.

இந்நிலையில், காலையில் வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற குவந்தை மதியம் 1.50 மணி அளவில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கழிவறைக்குச் சென்ற நிலையில் மீண்டும் வகுப்பறைக்கு திரும்பவில்லை. இதையடுத்து, கழிவறைக்கு சென்று தேடியபோது குழந்தை அங்கில்லை. அப்போது செப்டிக் டேங்க் மீது போடப்பட்டு இருந்த இரும்பு மூடி உடைந்து கிடந்தால் அதற்குள் குழந்தை விழுந்துவிட்டதோ என்று சந்தேகமடைந்துள்ளனர்.
இதையடுத்து, உடனடியாக விக்கிரவாண்டி காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, சிறுமி லியா செப்டிக் டேங்குக்குள் விழுந்து கிடந்தது தெரியவந்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் குழந்தை உயிரிழந்திருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: "விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த குழந்தை லியா லக்ஷ்மி (வயது 5) த/பெ.பழனிவேல் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த நிலையில் இன்று (03.01.2025) பிற்பகல் பள்ளியிலிருந்த கழிவு நீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை லியா லக்ஷ்மியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications