அன்புமணி செய்த அத்தனையும் மோசடி.. ராமதாஸ் தான் பாமக தலைவர்.. புட்டு புட்டு வைத்த ஜிகே மணி
விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் யுத்தம் உச்சத்தில் இருக்கிறது. ராமதாஸ், அன்புமணி இடையே வெடித்து கொண்டிருக்கும் பனிப்போர் காரணமாக, பாமகவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கூட்டங்கள் நடத்தி கட்சிக்கு உரிமை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் அன்புமணியை பாமக தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டது என்று நேற்று வழக்கறிஞர் பாலு கூறியிருந்தார். இது ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சி தலைவர் ராமதாஸ் தான் முகவரியை மாற்றி அன்புமணி மோசடி செய்வதாக ஜி.கே மணி புகார் தெரிவித்துள்ளார்.
பாமக முன்னாள் தலைவராக இருந்த ஜி.கே. மணி தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களை நம்ப வைக்க திட்டமிட்டு பொய் பரப்பி வருகிறார்கள். தேர்தல் ஆணைய கடிதப்படி, வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். அந்தக் கடிதம் திநகர் முகவரிக்கு சென்றுள்ளது. கட்சி முகவரி மாற்றம் செய்தி மருத்துவர் ஐயாவுக்கும், எங்களுக்கும் வருத்தமாக உள்ளது.

நிறுவனர் ஒப்புதல்
பாமகவின் நிரந்தர முகவரி தேனாம்பேட்டை என்பது அனைவருக்கும் தெரியும். அதை திசை திருப்பி முகவரியை மாற்றியுள்ளனர். இதுவே பெரிய மோசடி செய்தி. கடிதம் தலைவரின் பெயருக்கு வந்துள்ளது. ஆனால் முகவரியை மாற்றி ஏமாற்று வேலை செய்கிறார்கள். 9.9.25 தேதியில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட கடிதத்தில், மாமல்லபுரம் பொதுக்குழுவில் தேர்வு செய்து அனுப்பிய தகவலை பதிவு செய்து கொள்கிறோம் என்று தான் கூறினார்கள்.
வேறு எதுவும் இல்லை. மருத்துவர் அன்புமணி 25.8. 2022 ஆம் ஆண்டில் தலைவராக பொறுப்பேற்றார். அவரின் பதவிக்காலம் 28.5.2025 தேதியுடன் முடிந்துவிட்டது. அவரின் பதவியே நிறைவடைந்துவிட்டது. தலைவர் பதவியே இல்லாதவர் எப்படி பொதுக்குழு கூட்ட முடியும். அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது. பாமக அமைப்பு விதிகள்படி, நிறுவனர் ராமதாஸின் ஒப்புதல் இல்லாமல் எந்த செயல்பாட்டிலும் ஈடுபடக் கூடாது என்கிறது.
மோசடி
அதற்கு பிறகு 29.5.2025 தேதி பாமக நிர்வாக குழு கூடி ராமதாஸ் தான் கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம் முதல் அவர் நிறுவனர் மற்றும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சி செயற்குழுவும் கூடி அதை அங்கீகரித்துவிட்டது. 19.8.2025 தேதி பாமக பொதுக்குழுவிலும் முழுமனதோடு அதற்கு ஒப்புதல் வழங்கி ராமதாஸை தலைவராக அங்கீகரித்தது.
அப்படியிருக்கும்போது தலைவர், பொதுச்செயலாளர் பெயரில் கடிதம் எழுதுவது மக்களிடம் நாடகமாடுவது மிகப்பெரிய மோசடி. தலைவருக்கு தான் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் தான் தலைவர். முகவரி மாற்றியதால் தலைவர் மாறியதாக சொல்வது மோசடி என்று வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அந்த கடிதத்தை வைத்து தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு அவர்கள் ஆதரவாளர்கள் பெயர்களை சொல்வது தவறு.
முகவரி மாற்றம்
அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்ததையும் நீக்கியுள்ளனர். முகவரி மாற்றுவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் நிறுவனரின் ஒப்புதல் வேண்டும். அப்படி செய்யாமல் மோசடி நடந்துள்ளது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். பாமகவின் புதிய தலைவராக தேர்வானதை ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். விரைவில் அங்கீகாரம் கிடைக்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications