விக்கிரவாண்டியா ஓட்டை ‘விக்கிற’வாண்டியா? திமுக சொன்ன இட ஒதுக்கீடு என்னாச்சு? செளமியா அன்புமணி ஆவேசம்
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அங்கு முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் . அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்-ன் மனைவி சௌமியா அன்புமணி இட ஒதுக்கீடு குறித்தும் வாக்குக்கு பணம் கொடுப்பது குறித்தும் ஆவேசமாக பேசினார்.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி மரணமடைந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

ஒரு மாதத்திற்கு உள்ளாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் பரபரப்பில் உள்ளனர். அதே நேரத்தில் முதல் கட்சியாக திமுக தேர்தலில் போட்டியிடும் என்றதோடு வேட்பாளராக அன்னியூர் சிவாவையும் அறிவித்தது.
இதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி.அன்புமணியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாரமும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸும் அவரது மனைவி சௌமியா அன்புமணியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னர் அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத சௌமியா அன்புமணி கடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியை சந்தித்த போதிலும் தொடர்ந்து தொகுதிக்கு சென்று மக்களிடம் நன்றி தெரிவித்ததோடு அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இந்த நிலையில் தர்மபுரி தேர்தல் பிரச்சாரத்தின் போது அவரது பேச்சு மக்களை வெகுவாக கவர்ந்தது.
இதை அடுத்து தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க வைக்க பாமக தலைமை முடிவெடுத்ததை அடுத்தே விக்கிரவாண்டி தேர்தலிலும் அவர் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விக்கிரவாண்டியின் பல்வேறு பகுதிகளில் சௌமியா அன்புமணி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசாரத்தின் போது திமுக பணம் கொடுப்பது, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து பாப்பனப்பட்டு, பனையபுரம், பனப்பாக்கம், தொரவி, கயத்தூர், சிறுவள்ளிகுப்பம், வாக்கூர் கிராமங்களில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்மற்றும் அவரது மனைவி செளமியா அன்புமணி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். அப்போது பேசிய அவர், இட ஒதுக்கீடு கொடுக்கமுடியாது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தமுடியாது என்பவர்களுக்கு எத்தனை நாள் வாக்களித்து ஏமாறப்போகிறீர்கள்? இட ஒதுக்கீடு பெற பாமகவை ஆதரியுங்கள்.. ஆளுங்கட்சி என்பதால் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இது விக்கிரவாண்டியா அல்லது வாக்குகளை விக்கிற வாண்டியா என கேள்வி எழுப்பினார்.
மேலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை தராமல் திமுக ஏமாற்றி வருவதாகவும் இந்த தேர்தலில் வாக்குகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு வாக்களித்தால் மக்களுக்கு நல்லது எதுவும் நடக்காது எனவும் குற்றம் சாட்டினார். மேலும் பாமக மக்களுக்கு தேவையானதை செய்யும் என்றும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் மக்களை உலுக்கி எடுக்கும் நிலையில் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்கவே தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.. பாமகவுக்கு வாக்களிக்கும் போது மதுவிலக்கு கொள்கை அமல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications