விழுப்புரம் அருகே அண்ணாசிலை அவமதிப்பு: பாஜகவினர் 3 பேர் அதிரடி கைது
விழுப்புரம்: விழுப்புரம் கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணாசிலையை அவமதித்தது தொடர்பாக பாஜகவை சேர்ந்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கண்டமலங்கம் அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா உருவப்படத்துடன் கூடிய செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்தனர். இச்சம்பவம் அங்கு பேரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்துக்களை சூத்திரர் என்றும் சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்றும் மனுஸ்மிருதி சொல்கிறது என்பதை சுட்டிக்காட்டி ஆ.ராசா பேசினார். அதாவது ‛நீ பார்சியாக இல்லை என்றால் நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?. இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கின்ற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவர்களாக இருக்க விரும்புகின்றீர்கள்? என ஆ.ராசா பேசினார்.
ஆனால் இந்துப் பெண்களை, தமிழ்ப் பெண்களை ஆ.ராசா விமர்சித்துவிட்டார் என பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில்தான் கண்டமங்கலம் அண்ணா சிலை அவமரியாதை செய்யப்பட்டது. அண்ணா சிலை அவமரியாதை செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டங்களால் புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அண்ணா சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். இதனால் விழுப்புரம் பகுதியில் பதற்றம் நிலவியது.
இதனைத் தொடர்ந்து போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணைகளின் அடிப்படையில் பாஜகவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட யுவராஜ் , கணேஷ், கபில் ஆகிய 3 பாஜகவினரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications