விஜய் மாநாடு.. சுட்டெரிக்கும் வெயிலால் ஆபத்து.. ஸ்டாலினுக்கு அலர்ட் கொடுத்த பூவுலகின் நண்பர்கள்
விக்கிரவாண்டி: விஜய்யின் தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதற்காக ஏராளமான தொண்டர்கள் விக்கிரவாண்டியில் குவிந்துள்ளனர். அதிகளவு வெயில், குடிநீர் வசதி பற்றாக்குறையால் ஆங்காங்கே சிலர் மயக்கம் போட்டு வருகிறார்கள். இந்நிலையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அலெர்ட் விடுத்து ஒரு பதிவு போட்டுள்ளனர்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு, விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் வருகை நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் விஜய்யின் அரசியல் நகர்வை உற்று நோக்கி வருகின்றனர். விஜய் கட்சியின் கொள்கை என்ன, அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலையிலேயே மாநாட்டு அரங்கம் பாதிக்கு மேல் நிரம்பிவிட்டது. பல தொண்டர்கள் நேற்று இரவே விக்கிரவாண்டிக்கு வந்து தங்கியுள்ளனர். இருப்பினும் விக்கிரவாண்டியில் கொளுத்தும் வெயில், தண்ணீர் பற்றாக்குறையால் தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலர் ஆங்காங்கே மயக்கம் போட்டு வருகின்றனர். இதுகுறித்து விஜய் தரப்பிலும் ஆலோசனை நடத்தப்பட்டது. வெயில் காரணமாக, மாநாட்டை ஒரு மணி நேரம் முன் கூட்டியே தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி தவெக மாநாடு 3 மணியளவில் தொடங்க உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தவெகவின் முதல் மாநாடு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் காலையிலிருந்தே தொண்டர்கள் அதிகம் கூடியுள்ளனர். வெயிலின் தாக்கத்தால் சிலர் மயக்கமடைந்ததாக செய்திகள் வருகின்றன.
இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.வெப்பநிலையும் ஈரப்பதமும் சேர்ந்த கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். என்று கூறியுள்ளார்.
வானிலை ஆய்வு மையத்தின் வெயில் தொடர்பான பதிவுகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தப் பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை குழு, தவெக தலைவர் விஜய், தவெக ஆன்லைன் குழு ஆகியோரை டேக் செய்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த, விமான சாகச நிகழ்ச்சியில் லட்சகணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கடுமையான வெயில், நெரிசல் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகளும் நடந்தன. தவெக மாநாட்டிலும் அதிகளவு கூட்டம் கூடி வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications