தவெக மாநாட்டில் குவிந்த நண்பாஸ்.. ஸ்தம்பித்த வி.சாலை.. நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை
விக்கிரவாண்டி: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுகிறது. தொண்டர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வி.சாலை வழியாக போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு, விக்கிரவாண்டியில் இன்று நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்து வருகின்றனர். விஜயின் அரசியல் வருகை நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் விஜயின் அரசியல் நகர்வை உற்று நோக்கி வருகின்றனர். விஜய் கட்சியின் கொள்கை என்ன, அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் விஜயின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலையிலேயே மாநாட்டு அரங்கம் பாதிக்கு மேல் நிரம்பிவிட்டது. பல தொண்டர்கள் நேற்று இரவே விக்கிரவாண்டி வந்து தங்கியுள்ளனர். மாநாட்டு பணிகளை விஜய் நேற்று இரவு சென்று பார்வையிட்டார். முதல் மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றுவதற்கு பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 20,000 மின் விளக்குகள், 72 எல்இடி திரைகள், 3 கி.மீ பரப்பளவுக்கு தண்ணீர் தொட்டிகள், 200 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளன.
க்யூ ஆர் கோட் மூலம் ரசிகர்களின் வருகை பதிவை கணக்கிடும் பணிகள் நடந்து வருகின்றன. அதிகளவு கூட்டம் கூடுவதால் விக்கிரவாண்டி சுற்று வட்டாரத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நேரம் போக போக கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியாகி வருகிறது. மாநாட்டுக்காக தொண்டர்கள் கடைபிடிக்க வேண்டியவற்றை குறித்து விஜய் ஏற்கனவே கடிதங்கள் மூலம் குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்புடன் வந்து பத்திரமாக வீடு திரும்ப வேண்டும், பொது மக்களுக்கு இடைஞ்சல் தரக்கூடாது என கூறியிருந்தார்.
இந்நிலையில் மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநாட்டில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர். முதலில் மாநாடு இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் என கூறியிருந்தனர். வெயிலின் தாக்கத்தால் தற்போது முன் கூட்டியே மாநாட்டை தொடங்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி மாநாடு மதியம் 3 மணியளவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாகிகள் மாநாட்டு மேடைக்கு வரத் தொடங்கியுள்ளனர். கட்சித் தலைவர் விஜய் மாலை 6 மணியளவில் பேசத் தொடங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சுமார் 1.30 மணி நேரம் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.
மாநாட்டை இரவு 9 மணியளவில் முடிக்க திட்டமிட்டிருந்தனர். தற்போது மாநாடு சற்று நேரத்துக்கு முன்பே நிறைவு பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தவெக மாநாட்டுக்குச் செல்லும் தொண்டர்களால் வி.சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் கூட்டேரிப்பட்டு, மயிலம் வழியாக மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. அதேபோல, விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் பேருந்துகள் செஞ்சி வழியாகச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கார், வேன், பேருந்துகளில் தொண்டர்கள் குவிந்து கொண்டே இருக்கின்றனர். இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. மாநாட்டு திடலுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் வகையில் இரு பகுதிகளிலும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனாலும், வாகன நிறுத்தும் இடங்கள் நிரம்பி விட்டதால் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே தொண்டர்கள் பலரும் நடந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications