விழுப்புரத்தில் திமுகவா? அதிமுகவா? கடும் போட்டி! யாருக்கு அதிக சதவீத ஓட்டு?- தந்தி டிவி Exit poll
விழுப்புரம்: 18 வது லோக்சபா தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய தந்தி டிவியின் கருத்துக்கணிப்பின் முடிவில் விழுப்புரம் லோக்சபா தொகுதியில் மீண்டும் 2வது முறையாக திமுக கூட்டணி வேட்பாளரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஜெய்ப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு வேட்பாளரும் பெறும் வாக்கு சதவீதம் தொடர்பான விபரம் வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதில் பதிவாகி உள்ள ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா? இல்லாவிட்டால் மீண்டும் பாஜக ஆட்சியை தொடர்கிறதா? என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அதன்படி தந்தி டிவி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகள் தொகுதி வாரியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ரவிக்குமார் 41சதவீதம்,அதிமுகவின் பாக்யராஜ் 35சதவீதம், பாமகவின் முரளி சங்கர் 16 சதவீதமும் ஓட்டுகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனித்தொகுதிகளில் ஒன்று விழுப்புரம். இந்த தொகுதியின் சிட்டிங் எம்பியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் உள்ளார். இவர் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது மீண்டும் திமுக கூட்டணியில் ரவிக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக விழுப்புரம் தொகுதியில் களமிறங்கி உள்ளார். இந்த முறை அவர் உதயசூரியனுக்கு பதில் பானை சின்னத்தில் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் 2வது முறையாக வெல்லும் முனைப்பில் சிட்டிங் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் உள்ளார் என்று தந்தி டிவியின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications