சார் ஏடிஎம் கார்டு பிளாக் ஆயிடுச்சி! ரெனிவல் செய்ய ஓடிபி சொல்லுங்க.. ஓய்வூதியரிடம் ரூ 1 லட்சம் மோசடி
விழுப்புரம்: ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டும். அதற்காக செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை கொடுங்கள் என கேட்டு ஒரு கும்பல் ரூ 1 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கடம்பூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (78). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருடைய செல்போனை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அந்த நபர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக அந்த நபர் கூறியுள்ளார். அவர் பேசுகையில் நீங்கள் பயன்படுத்தி வரும் ஏடிஎம் அட்டை முடக்கம் செய்யப்பட்டுவிட்டது. அதனை புதுப்பிக்க வேண்டும்.
அப்போதுதான் உங்களுடைய ஏடிஎம் கார்டை நீங்கள் பயன்படுத்த முடியும் என்றார். இதை கிருஷ்ணனும் நம்பியுள்ளார். மேலும் என் கார்டை எப்படி புதுப்பிக்க வேண்டும். எப்போது வங்கிக்கு வர வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு மறுமுனையில் பேசிய நபர் நீங்கள் வங்கிக்கெல்லாம் வர தேவையில்லை.
நாங்களே ஒவ்வொரு கஸ்டமராக போன் செய்து அவர்களுக்கு கார்டை புதுப்பிக்கும் பணியை செய்து வருகிறோம். அதனால் நீங்கள் வயதான காலத்தில் அலைய வேண்டாம். நான் ஏடிஎம் கார்டை புதுப்பிப்பதற்கான பணிகளை செய்கிறேன். உங்களது ஏடிஎம் கார்டு எண்ணை சொல்லுங்கள் என்றார்.
கிருஷ்ணனும் அந்த எண்ணை சொல்லியுள்ளார். பின்னர் உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும். அதையும் கொடுங்கள் என்றாராம். அதற்கு கிருஷ்ணனும் அந்த எண்ணை அளித்தாராம். பின்னர் அன்றைய தினமே கிருஷ்ணனின் வைப்புத் தொகை கணக்கில் இருந்த ரூ 1 லட்சத்து 10 ஆயிரத்தில் ரூ 98,990 ஐ கடன் எடுத்த தொகையாக இன்டர்நெட் பேங்கிங் மூலம் கிருஷ்ணனின் சேமிப்பு கணக்கிற்கு மாற்றினார்.
மேலும் அந்த கணக்கில் இருந்து 1 லட்சத்தை பல தவணைகளாக கிருஷ்ணனுக்கு தெரியாமல் நூதனமாக எடுத்து மோசடி செய்துள்ளார். ஆனால் இந்த விவரம் தெரியாமல் கிருஷ்ணன், கடந்த 17ஆம் தேதி பணத்தை எடுக்க வங்கிக்கு கிருஷ்ணன் சென்ற போதுதான் தன்னுடைய பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். காவல் துறையில் இது போல் யாராவது கேட்டால் ஓடிபி எண் உள்ளிட்டவற்றை சொல்ல வேண்டும் என அறிவுறுத்தியும் பலர் இது போல் ஏமாறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications