ரூ.25 கோடி ஸ்வாகா.. தொடர்ந்து உடைப்பு.. தரமற்று கட்டப்பட்ட.. தளவானூர் தடுப்பணை வெடிவைத்து தகர்ப்பு!
விழுப்புரம்: கடந்த ஆட்சியில் கட்டப்பட்டு, ஒரே ஆண்டிற்குள் இரண்டு முறை உடைந்த தளவானூர் தடுப்பணையை இரண்டு நாட்கள் முயற்சிக்குப் பிறகு அதிகாரிகள் வெடிவைத்துத் தகர்த்தனர்.
Recommended Video
கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம் அருகிலுள்ள தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலத்திற்கு இடையே தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.37 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது.
400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும் கொண்டது இந்த தடுப்பணை. மொத்தம் மூன்று ஷட்டர்களுடன் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணையை அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்துவைத்தார்.

தடுப்பணை உடைந்தது
இந்த தடுப்பணை மூலம் தேக்கி வைக்கும் தண்ணீர் கடலுார் மாவட்டத்தில் எனதிரிமங்கலம் வாலாஜா வாய்க்கால் மூலம் கரும்பூர், கொரத்தி, திருத்துறையூர், பூண்டி, கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை, புலவனுார், மேல்குமாரமங்கலம், எல்.என்.புரம், பூங்குணம், கோட்லாம்பாக்கம் என மொத்தம் 14 ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து வந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் தளவானுார், கள்ளிப்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களுக்குப் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

புதிய அணை கட்டப்படும்
இந்நிலையில் இந்த அணை திடீரென கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நீர் தேக்கி வைக்க முடியாமல் முழுவதுமாக அப்போது வெளியேற்றப்பட்டது. அதையடுத்து மண் சுவர் எழுப்பப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. தரமற்ற நிலையில் அப்போதைய அரசு கட்டியதாக விமர்சனம் எழுந்தது. இதையடுத்து அந்த அணை தகர்க்கப்பட்டு புதிய அணை கட்டப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறி இருந்தார்.

ஆட்சியர் அறிவுரை
கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாகத் தென் பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் தளவானூர் பகுதியைச் சேர்ந்த தடுப்பணையின் மற்றொரு பகுதி முற்றிலுமாக உடைந்து சேதமடைந்து முழுவதுமாக தண்ணீர் வெளியேறிவருவதால் ஆற்றின் கரையோரப்பகுதி சேதமடைந்து வருகிறது. எனவே. தடுப்பணையின் ஒரு பகுதியினை வெடிவைத்துத் தகர்த்து ஆற்றின் கரையோரப்பகுதி சேதமடையாமலும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வெள்ளநீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் மோகன் அறிவுறுத்தியிருந்தார்.

ஜெலட்டின் குச்சிகள்
இதையடுத்து நேற்று நீர்வள ஆதார பொதுப்பணித் துறையினர், பாறைகளைத் தகர்க்கப் பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளைக் கையாள்வோரைக் கொண்டு, தென்பெண்ணயாற்றின் தெற்கு கரையோரப் பகுதியான எனதிரிமங்கலம் பகுதி வழியாக அணையின் சேதமடைந்த பகுதிகளுக்குச் சென்று 100 ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி அணையை வெடிக்கச் செய்தனர். ஆனாலும் சேதமடைந்த பகுதி எதிர்பார்த்த அளவுக்கு வெடித்துச் சிதறாததால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆட்சியர் மோகன், பொதுப்பணித் துறையினரிடம் ஆலோசனை நடத்தினார்.

தடுப்பணை தகர்ப்பு
அதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தடுப்பணையை வெடி வைத்து இடிக்கும் பணி தொடர்ந்தது. இந்த பணியில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர், இதனையடுத்து அதிக அளவு வெடி மருந்துகளைப் பயன்படுத்தி தடுப்பணை முற்றிலுமாக தகர்க்கப்பட்டது. முன்னதாக அப்பகுதியில் மக்கள் கூடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். தடுப்பணையை வெடி வைத்துத் தகர்க்கும் பணி காரணமாக ஏராளமான போலீசார் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications