‛‛என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க’’.. அமைச்சர் பொன்முடியின் மனைவி காலில் விழுந்த விசிக எம்பி ரவிக்குமார்
விழுப்புரம்: திமுக கூட்டணியில் மீண்டும் விழுப்புரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் அவர் அமைச்சர் பொன்முடியின் மனைவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதி என்று மொத்தம் 40 லோக்சபா தொகுதியிலும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்.

இதனால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், சீமானின் நாம் தமிழர் வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
இதில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கடந்த 2019 தேர்தலைபோல் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பியும், விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பியும் போட்டியிட்டனர். இவர்கள் 2 பேரும் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் எம்பியாகி உள்ளனர்.
இதில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் மொத்தம் 4 லட்சத்து 77 ஆயிரத்து 33 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் 4 லட்சத்து 63 ஆயிரத்து 30 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். இதனால் ரவிக்குமார் 70,703 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் எம்பியாகி உள்ளார். இந்த தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் முரளி சங்கம் 1 லட்சத்து 81 ஆயிரத்து 882 ஓட்டுகளுடன் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அமைச்சர் பொன்முடி சேரில் அமர்ந்து இருக்கிறார். அவர் அருகே அவரது மனைவி விசாலாட்சி நிற்கிறார். இந்த சமயத்தில் விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் எம்பியாகி உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்.
அதாவது விழுப்புரம் தொகுதியில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கும். இதில் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக திமுகவின் அமைச்சர் பொன்முடி உள்ளார். இவர் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். இதனால் வெற்றி பெற்ற பிறகு மரியாதை நிமித்தமாக ரவிக்குமார் பொன்முடியை சந்தித்து நன்றி கூறி வாழ்த்து பெற்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications