விழுப்புரம் மனைவி.. கடைசிவரை அபி கையை விடாத மணிகண்டன்.. தேங்காய் நார், சிமெண்ட் ஷீட்! அன்பின் உச்சம்
விழுப்புரம்: விழுந்து விழுந்து அபியை காதலித்துள்ளார் மணிகண்டன்.. அபிக்கு 54 வயதாகிறது.. மணிகண்டனுக்கு 49 வயதாகிறது.. வயது வித்தியாசமின்றி இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் வசித்து வரும் தம்பதி மணிகண்டன் - அபி.. இவர்கள் இருவருக்குமே திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது.. தன்னை விட வயது அதிகம் இருந்தாலும், அபியை மணிகண்டன் மனதார விரும்பி காதலித்து திருமணம் செய்தவர்... ஆனால், இவர்களுக்கு குழந்தை இல்லை.

தம்பதிகள்: இதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்கள்.. ஆரம்பத்தில் சென்னையிலேயே இந்த தம்பதி வசிக்க துவங்கியிருக்கிறார்கள்.. 4 வருடத்துக்கு முன்புதான், மணிகண்டனின் அண்ணன் கோபாலுடன் பிள்ளைச்சாவடி பகுதியில் குடியேறியுள்ளனர்... ஆனால், தன்னுடைய அண்ணனிடமிருந்தும் மணிகண்டன் தனியாக பிரிந்துவிட்டார். அதே பகுதியில் இன்னொரு வீடு தனியாக எடுத்துக் கொண்டு, அபியுடன் வாழ்ந்து வந்தார்.
மணிகண்டனுக்கு எந்த வேலையும் நிரந்தரமில்லை. ஆனால், கட்டிட வேலை உட்பட எந்த வேலை கிடைத்தாலும் அதை செய்து வந்தார்... மனைவி அபிக்கு குழந்தை பேறுக்கான சிகிச்சையை எடுக்க வேண்டியிருப்பதால் அதற்கு பணம் தேவைப்பட்டது. அதேபோல அபிக்கு சர்க்கரை வியாதியும் சேர்ந்துகொண்டது. எனவே, இதற்கும் சேர்த்து சிகிச்சை தரவேண்டியதாகிவிட்டது. இதனால் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் திணறி வந்துள்ளார்.
மனநலம் பாதிப்பு: இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், சமீப காலமாக அபிக்கு, மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளது.. இதற்கும் சிகிச்சையை தந்துவந்துள்ளார் மணிகண்டன். ஆனால், சிகிச்சைகளுக்கே பணம் போதவில்லை..
இதனால், தொடர்ந்து மன குழப்பத்தில் இருந்த மணிகண்டன், சம்பவத்தன்று இரவு, தன்னுடைய வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டார். பிறகு வீட்டிடிலிருந்த தேங்காய் நார் கயிற்றை எடுத்துவந்து, அபியின் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டார். பிறகு சிமெண்ட் ஷீட் பொருத்தப்பட்டிருந்த இரும்பு பைப்பில், அதே கயிற்றால் மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டார்.
நேற்று காலை நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால், அதே பகுதியில் வசித்து வரும் அவரது அண்ணன் கோபால் சந்தேகப்பட்டு, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதுதான், மணிகண்டன் தூக்கில் பிணமாகவும், கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட காயத்துடன் அபியும் சடலமாகவும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போஸ்ட் மார்ட்டம்: இதுகுறித்து தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தம்பதியின் சடலங்களை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக புதுச்சேரி கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, கோபால் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
சர்க்கரை நோயிற்கு சிகிச்சை மேற்கொண்ட அபி, அதிக மாத்திரை சாப்பிட்டதில், சில மாதங்களுக்கு முன்புதான் மனநிலை பாதிக்கப்பட்டாராம்.. மணிகண்டன் சம்பாதித்த பணம் முழுவதையும் சிகிச்சைக்கு செலவழித்தும்கூட, அவருக்கு நோய் குணமாகவில்லை. இதனால், விரக்தியடைந்த மணிகண்டன், சில நாட்களுக்கு முன்பு, அபியுடன் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றாராம்.. ஆனால், கடற்கரையிலிருந்தவர்கள், அந்த தம்பதியை காப்பாற்றி அறிவுரை சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
தற்கொலை முயற்சி: பிறகு, 2 நாட்களுக்கு முன்பு, வீட்டில் சாப்பாட்டில் பூச்சி மருந்து கலந்து அபிக்கு தந்துவிட்டு, அதை தானும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் மணிகண்டன். அப்போதும், அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் இந்த தம்பதியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார்கள். பிறகு மறுநாளே மீண்டும் இப்படியொரு முடிவை எடுத்துள்ளார் மணிகண்டன்.
மணிகண்டனும், அபியும் அந்நியோன்யமான தம்பதிகளாம்.. வெளியில் எங்கே சென்றாலும் ஒன்றாகவே செல்வது வழக்கமாம்.. 2 பேரும் எப்போது வெளியில் சென்றாலும், கையை பிடித்துக்கொண்டுதான் போவார்களாம். சிறிய வருமானம் என்றாலும், மகிழ்ச்சியோடு பிரச்னையின்றி வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அபிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால்தான், மிகவும் நொந்துபோயிருக்கிறார் மணிகண்டன்..
கடின உழைப்பு: எவ்வளவு கடினமான உழைத்தாலும், சிகிச்சைக்கு பணம் போதாமல் இருந்துள்ளது.. அதனால், தற்கொலை செய்து கொள்ள போவதாக, தனது நண்பர்களிடம் சொல்லி கொண்டேயிருந்தாராம் மணிகண்டன்... காதலித்து திருமணம் செய்த மனைவியை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications