பொன்முடி வீட்டுக்குள் சென்ற 3 பைகள்.. உள்ளே என்ன இருக்கு? ED அதிகாரிகளை சுத்துப் போட்ட திமுகவினர்!
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடந்து கொண்டிருக்கும்போது 3 பைகளை அமலாக்கத்துறையினர் வீட்டுக்குள் எடுத்துச் சென்றதால் திமுகவினர் கொந்தளித்து, 3 பைகளையும் திறந்து காட்டச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மற்றும் விழுப்புரரத்தில் 9 இடங்களில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை முதல் ரெய்டு: விழுப்புரத்தில் கிழக்கு சண்முகாபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 8 மணி முதல் தீவிரமாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொன்முடியின் வீட்டில் உள்ள பீரோ மற்றும் லாக்கரின் சாவி இல்லாததால் நீண்ட நேரம் அதிகாரிகள் காத்திருந்தனர். பீரோ சாவி இல்லை என அமைச்சர் பொன்முடியின் உதவியாளர் தெரிவித்த நிலையில், சல்லடை போட்டு துழாவினர்.
பின்னர் போலி சாவி தயாரிக்கும் நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் வரவழைத்தனர். போலி சாவி மூலம் பீரோ, லாக்கரை திறக்க அதிகாரிகள் முயற்சித்தனர். பீரோ திறக்கப்பட்ட நிலையில், லாக்கரை திறப்பதற்கு முயற்சி செய்தும் திறக்க முடியாததால், பீரோவை மட்டும் திறந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுகவினர் வாக்குவாதம்: இந்நிலையில், அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின்போது அவர்களிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் இருந்து மூன்று பைகளை பொன்முடியின் வீட்டிற்குள் எடுத்து சென்றனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் பைகளில் என்ன இருக்கிறது என திறந்து காட்டினால் தான் உள்ளே விடுவோம் எனக் கூறி அமலாக்கத்துறை அதிகாரிகளை சுற்றி வளைத்தனர். திமுகவினரின் வாக்குவாதத்தை மீறி அவர்கள் பைகளை உள்ளே கொண்டு சென்ற நிலையில், அமலாக்கத்துறை சோதனையை தொடரக்கூடாது என வலியுறுத்தி திமுகவினர் சத்தம் போட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
3 பேக்: இதையடுத்து, உள்ளே கொண்டு சென்ற ஒரு பையை கொண்டு வந்து திறந்து காட்டினர். தொடர்ந்து, அங்கிருந்து திமுகவினரை கலைந்து செல்லுமாறு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர். எனினும், உள்ளே 3 பைகளை கொண்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அடிக்கடி அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே வந்து செல்வதற்கும் அங்கிருந்த திமுகவினர் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications