செஞ்சி சிறுமி இன்னும் கிடைக்கல! அன்று இரவெல்லாம் செங்கல் சூளை எரிந்ததாமே? காட்டில் இறங்கிய சிபிசிஐடி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில் 20 நாட்களைக் கடந்தும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. போலீஸாரின் தேடுதல் வேட்டை ஒருபுறம், சிபிசிஐடியின் தீவிர விசாரணை மறுபுறம் என ஆலம்பூண்டி கிராமமே பரபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில், செங்கல் சூளை, 600 செல்போன் அழைப்புகள் என விசாரணையின் கவனம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வடிவேலு - பவானி தம்பதி. இவர்களது 7 வயது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி. கடந்த 11-ம் தேதி மாலை சிறுமி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்... அன்று இரவு பெற்றோர் மற்றும் பாட்டியுடன் ஒரே ரூமில் படுத்து தூங்கியுள்ளார்.
ஆனால் மறுநாள் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை வடிவேலு அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
சிபிசிஐடி போலீஸ்
10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. மோப்ப நாய்கள், டிரோன்கள் உதவியுடன் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்லாமல், கிணறுகள், புதர்கள், பாறைகள், நீர்நிலைகள் என மொத்த இடத்திலும் தேடினர். சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து கடந்த அக்டோபர் 21-ம் தேதி இரவு இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. கிராமத்துக்குச் சென்ற சிபிசிஐடி போலீஸார் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டவர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்தினர்.
இரவெல்லாம் எரிந்த சூளை
சிறுமி மாயமாகி 20 நாட்களைக் கடந்துள்ள நிலையில், சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.. குறிப்பாக ஆலம்பூண்டி பகுதியில் உள்ள செங்கல் சூளையில் மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.. காரணம், சிறுமி காணாமல் போன அக்டோபர் 11-ம் தேதி இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை அந்த செங்கல் சூளை தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததாம்.. அதனால், செங்கல் சூளையின் உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றிய 4 தொழிலாளர்கள் என மொத்தம் 5 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தொடரும் தேடுதல்
அதேபோல சிறுமியின் பெற்றோர், பாட்டி, சகோதரி, உறவினர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமியின் சகோதரிக்கு பெண் பார்த்ததாக கூறப்படும் மாப்பிள்ளை வீட்டாரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல ஆஞ்சநேயர் கோவில் பூசாரி, சிறுமியின் குடும்பத்தினருக்கு ஜாதகம் எழுதியவர் என பலரிடமும் போலீஸார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே, ஆலம்பூண்டியைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளிலும் சிறுமியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களையும் வரவழைத்து சிபிசிஐடி போலீஸார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுமி மாயமாகி 20 நாட்களைக் கடந்தும் இன்னும் எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், செங்கல் சூளை விசாரணை, காட்டுப் பகுதிகளில் தேடுதல் என சிபிசிஐடி போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்...!!!


Click it and Unblock the Notifications
