ஹைதராபாத் லேடீஸ் ஹாஸ்டலில் கருமுட்டை சேகரிப்பு கும்பல்? 10 பெண்களிடம் தீவிர விசாரணை
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பெகம்பேட் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில், கரு முட்டை சேகரிப்பு தொடர்பான சந்தேகத்துக்குரிய நடவடிக்கை நடைபெற்று வந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத் பிரகாஷ் நகரில் உள்ள அமி நீட்டா மகளிர் விடுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, 10 இளம் பெண்களை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
பெண்கள் விடுதியில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பெகம்பேட் போலீசாரும் மல்காஜ்கிரி சிறப்பு நடவடிக்கைக் குழுவினரு இணைந்து இந்தச் சோதனையை நடத்தினார்கள்.

பெண்கள் தங்கும் விடுதியாகச் செயல்பட்டு வந்த அந்த இடத்தில், இளம் பெண்களிடம் இருந்து கருமுட்டைகள் எடுக்கப்பட்டு, அவை கருத்தரிப்பு சிகிச்சை மையங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
ஓராண்டாக நடைபெற்று வந்ததா?
இந்தச் செயல்பாடு சுமார் ஓராண்டாக நடைபெற்று வந்திருக்கலாம் என ஹைதராபாத் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த விடுதிக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களிடமிருந்து கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு, கருத்தரிப்பு மையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சட்டவிரோதமாக கருமுட்டை சேகரிப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தவர்கள் யார், பெண்கள் எவ்வாறு அழைத்து வரப்பட்டனர், இந்தப் பரிவர்த்தனைகள் மூலம் யார் பணப் பலன் அடைந்தனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா பெண்களிடம் விசாரணை
பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 10 பெண்கள் அந்த விடுதியில் இருந்ததாகவும், அவர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண்கள் தாங்களாகவே அங்கு வந்தார்களா, கூறப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து அவர்களுக்குத் தெரியுமா அல்லது இடைத்தரகர்கள் மூலம் அழைத்து வரப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விடுதி நிர்வாகம், இடைத்தரகர்கள், கருத்தரிப்பு மையங்களுக்கு தொடர்பு உள்ளதா?
இந்த விவகாரத்தில் விடுதி நிர்வாகிகள், இடைத்தரகர்கள் மற்றும் கருத்தரிப்பு சிகிச்சை மையங்களுக்கு இடையே தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து உள்ளனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Click it and Unblock the Notifications
