ராமதாஸின் தைலாபுரம் வீட்டில் ஒட்டுகேட்பு கருவி.. அதை வைத்தது யார்? பாலு சொன்ன முக்கியமான விஷயம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அப்படி ஒரு முயற்சி நடந்திருந்தால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் ராமதாஸை நேசிக்கும் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி எனது வீட்டில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் தான் கண்டுபிடித்தோம் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார். தொடர்ந்து அவர் கூறும் போது, "எனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி. எனது வீட்டிலேயே, நான் உட்காரும் இடத்தில், எனது நாற்காலியின் பக்கத்தில் ஒட்டு கேட்கும் கருவி இருக்கிறது. யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்பது பற்றி ஆராய்ச்சி பண்ணி கொண்டு இருக்கிறோம்" என்றார்.

இந்நிலையில் பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், "விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அப்படி ஒரு முயற்சி நடந்திருந்தால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர். அவரது இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்தால், அது அங்கு கடுமையான பாதுகாப்பு குறைபாடு நிலவுவதைத் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் மருத்துவர் ராமதாஸ் அவர்களை நேசிக்கும் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அது போக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் உண்மை என்ன? ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருப்பது உண்மை என்றால் அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? எந்த நோக்கத்திற்காக அந்தக் கருவி பொருத்தப்பட்டது? என்ற உண்மைகளை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாட்டாளிகளுக்கும் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
எனவே, மருத்துவர் அய்யா அவர்களின் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்தப் பட்டதாக கூறப்படுவது குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுனர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்; ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டது உண்மை என தெரிய வந்தால் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications