விக்கித்துப்போன விக்கிரவாண்டி.. ஓட்டுப்போட காத்திருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட காத்திருந்த கனிமொழி என்ற பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் சூழலில் அவரை கத்தியால் குத்திய முன்னாள் கணவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக திமுகவின் புகழேந்தி இருந்தார். இவர் உடல்நலக்குறைவால் காலமானதால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி அன்புமணி, சீமானின் நாம் தமிழர் சார்பில் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இந்நிலையில் தான் திட்டமிட்டப்படி இன்று காலையில் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி மொத்தம் 12.94 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் தான் அனுமந்தபுரத்தை அடுத்த டி கொசப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் கனிமொழி (வயது 49) என்ற பெண் சென்று ஓட்டளிக்க வரிசையில் காத்து நின்றார்.
அப்போது அங்கு வந்த நபர் அவரை கத்தியால் குத்திவிட்டு ஓடினார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுதாரித்து கனிமொழியை கத்தியால் குத்தியை நபரை பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது பெயர் ஏழுமலை (52) என்பதும், அவர் கத்தியால் குத்திய கனிமொழியின் முன்னாள் கணவர் என்பதும் தெரியவந்தது. கருத்து வேறுபாட்டால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் நீண்ட காலத்துக்கு பிறகு கனிமொழியை பார்த்ததால் ஆத்திரமடைந்து கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஏழுமலையை போலீஸ் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
மேலும் இந்த கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் டி கொசப்பாளையம் கிராமத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். வாக்காளர்கள் கூர்மையான பொருட்கள் எதையாவது கையில் கொண்டு வருகிறார்களா? என்று போலீசார் சோதனை செய்து ஓட்டுப்போட அனுமதிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications