ஐயயோ.. தேர்தலில் மனைவி தோல்வி.. அதிமுக வேட்பாளரின் கணவர் விஷம் குடித்து தற்கொலை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி தேர்தலில் 19வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மனைவி தோல்வியடைந்த நிலையில் மனம் உடைந்த அவரது கணவரான மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்தார்.தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பெரும்பாலானா மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை திமுக கைப்பற்றி உள்ளது. திமுகவின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் உள்பட பிற கட்சிகளும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இந்த தேர்தல் அதிமுகவுக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் சேலம் மாவட்டம், அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் திமுக தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது. அதேநேரத்தில் தனித்து போட்டியிட்ட பாஜகவும் குறிப்பிட்ட வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மனைவி தோல்வியடைந்ததால் அவரது கணவர் தற்கொலை செய்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

சாத்தூர் நகராட்சி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் சுகுணா(வயது 52). இவரது கணவர் நாகராஜ் (58). இவர் சாத்தூர் நகராட்சியில் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். சுகுணா சாத்தூர் நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரது மனு ஏற்று கொள்ளப்பட்டது.
இதையடுத்து அவர் தனது வார்டில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மனைவி சுகுணாவை வெற்றி பெற செய்ய நாகராஜூம் தீவிரமாக தேர்தல் பணி செய்து வந்தார்.

சுகுணா தோல்வி
இந்நிலையில் பிப்ரவரி 19ல் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றது சாத்தூர் நகராட்சியிலும் எதிரொலித்தது. இங்குள்ள24 வார்டுகளில் 18 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வென்றனர். அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வென்றத. 19வது வார்டில் போட்டியிட்ட சுகுணா தோல்வியை தழுவினார். இந்த வார்டில் மொத்தம் 930 வாக்குகள் பதிவானது. இதில் சுகுணா 215 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சுபிதாவிடம் தோல்வியடைந்தார்.

கணவர் தற்கொலை
இதனால் சுகுணாவும், அவரது கணவர் நாகராஜூம் மனம் உடைந்தனர். விரக்தியின் உச்சத்துக்கு சென்ற நாகராஜ் திடீரென்று விஷம் குடித்தார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீடண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சி்கிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

சோகம்
இந்த சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நகராட்சி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட மனைவி தோல்வியடைந்ததில் மனம் உடைந்து கணவர் நாகராஜ் தற்கொலை செய்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications