விறு விறு விருதுநகர் வழக்கு..குற்றவாளிகளை விசாரிக்க போலீஸ் கஸ்டடி..நீதிமன்றத்தில் சிபிசிஐடி கோரிக்கை
விருதுநகர் : விருதுநகரில் பட்டியலின இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக பிரமுகர் உட்பட கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி அதனை விடியோ எடுத்துவைத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டத்தில் தாயாருடன் வசித்து வரும் 22 வயது இளம்பெண்ணுக்கு அதேபகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் பாலியல் வன்கொடுமை
ஹரிஹரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு வைத்து அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனிடையே அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹரிஹரனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஹரிஹரன் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதை அடுத்து அந்த இளம்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

வீடியோ மூலம் மிரட்டல்
இதற்கிடையில் ஹரிஹரன், ஏற்கனவே பதிவு செய்த வீடியோ காட்சிகளை வைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். பிறகு அந்த வீடியோவை ஹரிஹரன் தனது நண்பர்களுக்கு சமூக ஊடகம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். ஹரிஹரனின் நண்பர்களும் அந்த வீடியோவை இளம் பெண்ணிடம் காட்டி மிரட்டி அவருடன் பாலியல் உறவு வைத்ததும், ஹரிஹரன் தொடர்ந்து இளம் பெண்ணை தொந்தரவு செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் இதில் ஈடுபட்டது 8 குற்றவாளிகள் என தெரியவந்தது.

சிபிசிஐடிக்கு மாற்றம்
விருதுநகர் பாலியல் வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும்என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர்.விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பிக்கள் சரவணன் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரியான வினோதினி ஆகியோரிடம் சிபிசிஐடி எஸ்பி.முத்தரசி ஆலோசனைகளை நடத்தினார்.

விசாரணை காவல்
அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும், ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதி மன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் எஸ்பி முத்தரசி, டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் சாவித்திரி ஆகியோர் நேரில் சென்று மனு தாக்கல் செய்துள்ளனர். சிபிசிஐடி தரப்பில் 7 நாட்கள் கேட்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications