ஸ்ரீவில்லிபுத்தூர் டூ தாம்பரம்.. கூட்டத்தை பார்த்தாலே அனுவுக்கு வரும் ஆசை.. பின்னாடியே வந்த கணவன்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடிப்பூர திருவிழா தேரோட்டம் கடந்த மாதம் 7-ந் தேதி நடந்தது. இந்த ஆடிப்பூர திருவிழா தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 5 பெண்களிடம் தங்க நகை திருடிய இளம் தம்பதியை கண்டுபிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார், அவர்களை சென்னை தாம்பரத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். எப்படி சிக்கினார்கள் என்பதை பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடிப்பூர திருவிழா தேரோட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி நடந்தது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இந்த விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைகள் திருட்டு நடந்தது. அப்படித்தான் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியை சேர்ந்த நாயகம் (வயது 50) என்ற பெண், தேரோட்ட விழாவுக்கு வந்திருந்தார். இவர், மேலரத வீதியில் நின்றிருந்த போது, இவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போனது.

இதேபோல் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமியிடம் (58) இருந்து 3 பவுன் நகையும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 58 வயதாகும் பரமேசுவரியிடம் 5 பவுன் தங்க நகையும், சிவகாசி பகுதியை சேர்ந்த 54 வயதாகும் மகாலட்சுமியிடம் இருந்து 3 பவுன் தங்க நகையும், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 60 வயதாகும் மாரியம்மாளிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியும் திருட்டு போனது. மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக 5 பெண்களும் புகார் அளித்ததன் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்ட விழாவில் மேற்கண்ட பெண்களிடம் நகை திருடியவர்களை பிடிக்க பல்வேறு இடங்களில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது தங்க செயின் பறிப்பு சம்பவம் நடந்த இடங்களில் எல்லாம் ஒரு இளைஞர் மற்றும் இளம் பெண் இருப்பதை போலீசார் கண்டனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும்
போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் யார்? என்பதை அடையாளம் காண முயன்ற போது, உள்ளூரை சேர்ந்தவர்கள் இல்லை என்பது உறுதியானது.
கூட்டத்தில் கைவரிசை காட்டிவிட்டு வெளியூருக்கு தப்பிய அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கேரள பதிவு எண் கொண்ட காரில் தப்பியது தெரியவந்தது. அந்த கார் பற்றிய விவரங்களை சேகரித்தபோது அது சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவருடையது என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் தேடிய இளம்பெண்ணும், இளைஞரும் தம்பதி என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அந்த இளைஞர் அஜித் (29) என்றும், இவருடைய மனைவி அனு (26) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா தேரோட்டத்துக்கு திரளும் கூட்டநெரிசலை பயன்படுத்தி நகை திருட, கணவன்-மனைவி இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தனர். அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி பல பெண்களிடம் தங்க நகைகளை நைசாக திருடி விட்டு மீண்டும் தாம்பரத்துக்கு தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கணவன், மனைவியை கைது செய்து அவர்களிடம் இருந்த 18 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். அவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications