சிவகாசியில் மாமியார் வீட்டில் மருமகன் செய்த செயல்.. ஆடிப்போன போலீஸ்.. பஸ் ஸ்டாண்டில் சுற்றிவளைப்பு
விருதுநகர்: ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்தவர் காளிதாஸ் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார்.இவர் சிவகாசி விஸ்வநத்தம் காமராஜர் காலனியை சேர்ந்த மாரீசுவரி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் குடும்ப தகராறில் காளிதாஸ் மாமியார் வீட்டிற்கு போய் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதலித்து திருமணம் செய்பவர்கள் காதலித்த காலம் போலவே, திருமணம் செய்த பிறகு இருக்கும் என்று நினைக்கிறார்கள்.ஆனால் எதார்த்தம் அப்படி இருப்பது இல்லை.. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய நேரத்தில், அதனை ஈகோவாக நினைத்து தகராறு செய்து பிரிந்து விடுகின்றனர். சிலர் சேர்ந்து வாழ நினைத்தாலும், பின்னாளில் முடியாமல் போகிறது. சிவகாசியில் காதல் திருமணத்திற்கு பிறகு மருமகன் ஆத்திரப்பட்டு செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த 27 வயதாகும் காளிதாஸ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார். அப்போது காளிதாஸ் அதே ஆலையில் அவருடன் பணியாற்றிய சிவகாசி விஸ்வநத்தம் காமராஜர் காலனியை சேர்ந்த மாரீசுவரியை காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொண்டு மதுரை காளவாசல் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு காளிதாசுக்கும், அவருடைய மனைவிக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டிருக்கிறது.. இதனை தொடர்ந்து தாய் வீட்டிற்கு வந்த மாரீசுவரி தனது தாயார் வீரமணியுடன் சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் சிவகாசிக்கு வந்த காளிதாஸ் தனது மனைவியிடம் சமாதானம் பேசி அழைத்து செல்ல முயன்றிருக்கிறார்.
அப்போது மாரீஸ்வரிக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காளிதாஸ் தனது மாமியார் வீரமணியை கத்தியால் குத்தி உள்ளார். பின்னர் அவர் தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த வீரமணி இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
முதற்கட்ட விசாரணையில், சிவகாசியில் இருந்து மதுரை சென்ற பஸ்சில் காளிதாஸ் தப்பியுள்ளார். இதை தொடர்ந்து போலீசார், அந்த பஸ்சை பெருங்குடி சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தி பஸ்சில் இருந்த காளிதாசை கைது செய்தனர்.' இந்த கொலை சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications