விருதுநகர் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா: 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு சர்ப்ரைஸ்.. பிரம்மாண்ட வாய்ப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதார மேப்பையே மாற்றி அமைக்க காத்திருக்கும் பி.குமாரலிங்கபுரம் பிஎம் மித்ரா (PM MITRA) ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவிற்கான புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.. இது குறித்த விவரங்களையும், இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகளையும் இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!
தமிழகத்தின் ஜவுளி தொழில் வளர்ச்சியை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு வரும் பூங்காதான் பி.குமாரலிங்கபுரம் பிஎம் மித்ரா (PM MITRA) ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவாகும்.. இந்த பூங்காவின் பணிகள் தற்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது..

விருதுநகர் பூங்கா
கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முதற்கட்டமாக 11 நிறுவனங்களுடன் சுமார் 1,231 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் போடப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாகப் பிரம்மாண்ட முதலீடுகள் அணிவகுக்கத் தொடங்கி இருக்கின்றன..
குறிப்பாக, கடந்த ஜனவரி 2026 இறுதியில் நடைபெற்ற "சர்வதேச ஜவுளி கருத்தரங்கில்" முன்வைக்கப்பட்ட இலக்குகளின்படி, இந்தத் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக 10,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது..
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அதன் ஒரு பகுதியாக, இந்த வாரத்தில் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் அடுத்தகட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகக் கூடிய சூழல் நிலவுகிறது.. இந்த புதிய ஒப்பந்தங்கள் மூலம் பூங்காவின் உள்கட்டமைப்பு மற்றும் ஆடை உற்பத்தி சார்ந்த ஆலைகளின் உருவாக்கம் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
சிப்காட் நிறுவனத்தின் மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ள 1,052 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 600 ஏக்கர் நிலத்தை தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதற்கான பயனாளிகளுடன் இறுதி ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது..
இந்த திட்டமானது சுமார் 1894 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோரின் முன்னிலையில் உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகும்..
ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி
ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து தொழில்களும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவின் மூலம், விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது..
தொழிலாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, சுமார் 10,000 பேர் தங்கும் வகையிலான நவீன விடுதி வசதிகளும் இந்த பூங்காவிற்குள்ளேயே அமையவிருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது..
தமிழகம் ஏற்கனவே ஜவுளி உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள நிலையில், பிஎம் மித்ரா பூங்காவின் இந்த புதிய முதலீட்டு நகர்வுகள் உலகளாவிய ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பங்கை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.. எனவே, விரைவில் கையெழுத்தாக உள்ள இந்த புதிய ஒப்பந்தங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு மிகப்பெரிய தொழில்புரட்சிக்கான வாசலாக அமையும் எனக் கருதப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications