நிர்மலாதேவி வழக்கு சிபிஐக்கு மாற்ற கோரிய மனு.. தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை
நிர்மலாதேவி வழக்கினை சிபிஐக்கு மாற்றுவது குறித்த தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
Recommended Video
ஸ்ரீவில்லிப்புத்தூர்: பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் மதுரை ஹைகோர்ட் ஒத்தி வைத்துள்ளது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது 3 பேருமே ஜாமீனில் உள்ளனர்.
இந்நிலையில் நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க செயலர் சுகந்தி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

தெளிவாக இல்லை
அந்த மனுவில், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான உயர் அதிகாரிகள் பலருக்கு இந்த விவகாரத்தில் தொடர்புள்ளது. ஆனால் அவர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. யாருக்காக மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசினார் என்பது தெளிவாக விசாரிக்கப்படவில்லை.

இடைக்கால தடை
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிப்பதைவிட, சிபிஐ விசாரித்தால் நன்றாக இருக்கும். அதுவரை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் நடந்து வரும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார். அதன்படி, ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிர்மலாதேவி வழக்கின் விசாரணைக்கு மதுரை ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்தது.

வாக்குமூலம்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சுகந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மாணவிகளிடம் மாஜிஸ்திரேட் முன்பாக வாக்குமூலம் பெறவில்லை. நிர்மலாதேவி உயரதிகாரிகளுக்காக மாணவிகளிடம் பேசினார் என்று கூறும் சிபிசிஐடி போலீசார், அந்த உயரதிகாரிகள் யார் என்பதையும் குறிப்பிடவில்லை" என்று வாதிட்டார்.

தள்ளி வைப்பு
இதற்கு அரசு தரப்பில் "வழக்கு விசாரணை முறையாகவே நடைபெற்று வருவதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டியதில்லை" என்று எடுத்துரைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications